சினிமா

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படத்தில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா

webteam

மலையாள ரிமேக் படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான நடிகர்கள் தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடிக்க உள்ளனர்.

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான  ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படம்’ தமிழில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் இந்தப்படத்தை அவரது உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர். தந்தை கதாபாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக தர்ஷன் நடிக்கிறார். பெண் கதாபாத்திரத்தில் நடிகை லாஸ்லியா நடிக்கிறார். படத்திற்கு   'கூகுள் குட்டப்பன் ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரவிக்குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துளார். அதில் அவர் கூறும்போது, “ சரவணனும் சபரியும் என்னிடம் 10 வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குநர்களாக பணியாற்றினர். அவர்கள் இருவரும் இந்த படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்ததுடன், அந்தப் படத்தில் வரும் தந்தை கதாபாத்திரத்தை நான் செய்யுமாறு கேட்டனர்.

ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் தடைப்பட்டு நின்றது. அதன் பின்னர் அந்த படத்தின் உரிமையை நான் வாங்கி, தயாரிக்க முன்வந்தேன். இதில் எனக்கு மகனாக நடிகர் தர்ஷன் நடிக்கிறார்.பெண் கதாபாத்திரத்தில் நடிகை லாஸ்லியா நடிக்கிறார். துணை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபுவும், வில்லனாக ப்ராங்ஸ்டர் ராகுல் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசைப்பணி இன்று தொடங்குகிறது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 முதல் தென்காசி, குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ரோபோ ஒன்று நடிக்க உள்ளது. அதிகப்படியான வி.எப்.எக்ஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன.” என்றார்.