சினிமா

நடிகை கங்கனா ரனாவத் மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப் பதிவு!

நடிகை கங்கனா ரனாவத் மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப் பதிவு!

sharpana

மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டதால், நடிகை கங்கனா ரனாவத் மீது கொல்கத்தா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  213 தொகுதிகளைப் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக 77 இடங்களைப் பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்த நடிகை கங்கனா ரனாவத் “பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. 2000 - வது ஆண்டின் ஆரம்பங்களில் பிரதமர் மோடி இருந்தது போல தற்போது மாற வேண்டும், அதாவது குஜராத் கலவரம் சமயத்தில், மோடி இருந்தது போல தற்போது மாறவேண்டும். அவர் மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுக்க வேண்டும்” என்று வன்முறையை தூண்டுவதுபோல் பதிவிட்டிருந்தார். மிகுந்த சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்திய இந்த பதிவால் கங்கனாவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரிஜு தத்தா, ’கங்கனா வகுப்புவாத பிரச்சனையை தூண்டுகிறார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் சிதைந்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்’ கொல்கத்தா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரைத் தொடர்ந்து கொல்கத்தா காவல்துறையினர் 153 ஏ, 504, 505 ஐபிசி மற்றும் 43 மற்ரும் 66 ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.