சேகர் கம்முலா திரைப்படங்கள் pt
சினிமா

'Happy Days - Fidaa - Kubera.,' ஃபீல் குட் படங்களுக்கு பெயர் போனவர்.. யார் இந்த சேகர் கம்முலா?

தனுஷின் குபேரா படத்தை இயக்கிய இயக்குநர் சேகர் கம்முலா தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டடித்து இனிது இனிது படத்தின் ஒரிஜினல் வெர்சன் டைரக்டர். அதுமட்டுமில்லாமல் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.

PT WEB

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கிய குபேரா இன்று வெளியாகிவிட்டது. இதே சமயத்தில் சேகர் கம்முலா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த சேகர் கம்முலா? தெலுங்கு சினிமாவில் அவர் செய்து கொண்டிருந்தது என்ன? என ஒரு ரீவைண்ட் போகலாம்.

யார் இந்த சேகர் கம்முலா?

ஆந்திரா எள்ளூரில் பிறந்து, ஹைதராபாத்தில் வளர்ந்தவர் சேகர் கம்முலா. அமெரிக்காவில் எம் எஸ் முடித்து ஐடி துறையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய சேகருக்கு சினிமா என்றால் தீவிர ஆசை. எனவே வேலையை உதறிவிட்டு Howard University-ல் M.F.A பயின்றார். அப்போதே குறும்படங்கள் எடுப்பது என களத்தில் இறங்கிவிட்டார். அப்போது தானே தயாரித்து இயக்கி Dollar Dreams என்ற படத்தை உருவாக்கினார். சில இளைஞர்கள் அமெரிக்காவில் தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதா அல்லது தாய்நாடான இந்தியாவுக்கே திரும்ப செல்வதா என்ற களத்தில் உருவாகியிருந்தது அப்படம். இதற்கு 47வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த முதல் பட இயக்குநர் என்ற விருதை பெற்றார் கம்முலா.

சேகர் கம்முலா

அடுத்தாக சேகர் இயக்கிய படம் ஆனந்த். NFDC உடன் இணைந்து இப்படத்தை தயாரித்தார் சேகர். பணக்கார இளைஞன், ஒரு ஏழை பெண்ணின் காதலுக்காக செய்யும் விஷயங்களே படத்தின் களம். விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் படம் பெரிய வெற்றியடைந்தது. தமிழில் இப்படம் `நினைத்தாலே' என்ற பெயரில் இப்படம் விஸ்வாஸ் சுந்தர் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

அதன் பின் இவர் இயக்கிய கோதாவரி இன்று வரை க்ளாசிக் படமாக்க கொண்டாடப்படுகிறது. ராம் - சீதா இருவருக்குள்ளான உறவைப் பற்றிய படமாக உருவாகியிருக்கும் இப்படம். விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் வெற்றி பெற்ற இப்படம் Nandi, Filmfare போன்ற விருதுகளையும் வென்றது.

இனிது இனிது படத்தின் OG டைரக்டர்..

மென்மையான, நிதானமான படங்களை இயங்கிவந்த சேகர், ஒரு கலர்ஃபுல் படமாக இயக்கியதுதான் Happy Days. கல்லூரியில் படிக்கும் சில இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை, காதல், நட்பு என அட்டகாசமான ஃபீல் குட் படமாக கொடுத்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக் தான், பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `இனிது இனிது'. இதே படம் கன்னடத்திலும் ஜாலி டேய்ஸ் என ரீமேக் ஆனது.

Happy Days

இதற்கடுத்து சடாரென கியரை மாற்றி ஒரு பக்கா பொலிட்டிகல் படமாக `லீடர்' படத்தை இயக்கினார். இதுல உள்ள தமிழ் கனெக்ட் என்ன என்றால், இப்படத்தை தயாரித்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ வி எம். இப்படத்தின் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், இப்போது படு பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் ராணா டகுபதியின் அறிமுகப்படம் லீடர்தான். இந்தப் படமும் பெரிய ஹிட்டானது, மேலும் இந்தியில் படம் ரீமேக்கும் செய்யப்பட்டது.

leader

மறுபடி சேகர் தன் ஸ்டைலில் ஃபீல் குட் படமாக இயக்கியது, `லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்'. ஒரே ஏரியாவை சேர்ந்த சில நபர்கள், அவர்களது வாழ்க்கை என நகரும் கதை. சிலர் இப்படத்தை ஹேப்பி டேய்ஸ் படத்துடன் ஒப்பிட்டு பேசினாலும், இந்தப் படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்படம்..

எல்லோரும் குபேரா படம் மூலம் தான் சேகர் கம்முலா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார் என நினைக்கலாம். ஆனால் அவர் பத்து வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் உருவான படத்தின் மூலமே தமிழ் அறிமுகமாகிவிட்டார். இந்தியில் வெளியான கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக உருவான அனாமிகா. அந்தப் படத்தை பைலிங்குவலாக தமிழிலும் எடுத்து நீ எங்கே என் அன்பே என வெளியிட்டனர். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஒரு சின்ன பிரேக் எடுத்து மீண்டும் சேகர் இயக்கிய படம் தான் `ஃபிடா'. பானுமதி என்ற துறுதுறு பெண்ணைப் பற்றிய கதை. அவள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு பயம், அதிலிருந்து எப்படி மீள்கிறாள் என்பதை பற்றி பேசும். படத்தில் சாய் பல்லவியின் நடிப்பும் நடனமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பெரிய ஹிட்டாக கொடுத்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார் சேகர்.

Fidaa

முந்தைய படமான `ஃபிடா'வில் நடித்த சாய் பல்லவியுடன் மீண்டும் கைகோர்த்து நாயகனாக நாக சைதன்யாவை வைத்து சேகர் இயக்கிய படம் `லவ் ஸ்டோரி'. கல்லூரி, அரசியல், ஃபீல் குட் என படம் இயக்கியவர், முதன்முறையாக சாதிய பிரச்னையை இப்படத்தில் பேசினார். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நாயகன், ஆதிக்க சாதியை சேர்ந்த நாயகியை காதலிப்பதில் ஏற்படும் பிரச்சனை, பெண்கள் மீது செலுத்தப்படும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றை இப்படத்தில் பேசினார். இந்தப் படமும் பெரிய ஹிட்.

சேகர் கம்முலா படங்கள் என்றாலே உணர்ச்சி மிக்க கதைகள், இயல்பான உரையாடல்கள், சமூக மற்றும் அரசியல் கருத்துக்கள் போன்றவை பிரதானமாக இருக்கும். குறிப்பாக அவரது வலுவான பெண் கதாப்பாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படும். இவை எல்லாம் இந்த் 25 வருட சினிமா பயணத்தில் சேகர் கடந்து வந்தவை. இவ்வளவு பெரிய பயணத்தை கடந்துதான் இப்போது தனுஷ் நடிப்பே குபேரா படத்தை இயக்கியிருக்கிறார்.

kubera

இந்த முறை வர்க்க ரீதியான சிக்கல்களை பேச முயன்றிருக்கிறார். இப்படத்திற்கும் ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.