சினிமா

கிருத்திகாவின் ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸ் ட்ரெயிலர் வெளியீட்டு விழா - சிம்பு உருக்கம்

சங்கீதா

தனது தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி, ‘வணக்கம் சென்னை’, ‘காளி’ ஆகியப் படங்களை தொடர்ந்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற இணையத் தொடரை இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், கருணாகரன், கே. ரேணுகா, காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரண் குமார் இந்தத் தொடருக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில், வருகிற 29-ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் இந்த இணையத் தொடர் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு ‘பேப்பர் ராக்கெட்’ இணையத் தொடரின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் சிலம்பரசன், உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, மிர்ச்சி சிவா, இயக்குநர் மிஷ்கின், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்கள், சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். அப்போது நடிகர் சிலம்பரசன் பேசுகையில், தனது தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தார். இயக்குநர்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை என்றும் சிலம்பரசன் குறிப்பிட்டார். இந்த இணையத் தொடரின் ட்ரெயிலர் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.