சினிமா

3வது வாரத்திலும் ’ராக்கி பாய்’ ராஜாங்கம்தான்.. தமிழகத்தில் ‘கேஜிஎஃப் 2’ ரூ.100 கோடி வசூல்

sharpana

’கேஜிஎஃப் 2’ திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகம் அமைந்து இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது. இந்த மிகப்பெரிய வரவேற்பை உறுதி செய்யும் வகையில் படத்திற்கான வசூல் மழையும் கொட்டிய வண்ணம் இருந்து வருகிறது. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என இந்தப் படம் வெளியான 5 மொழிகளிலும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இரண்டு வாரங்கள் கடந்தும் திரையரங்களும் கே.ஜி.எஃப்2 படத்திற்கு கூட்டம் குறைந்த பாடில்லை. புதிய படங்கள் இந்த 5 மொழிகளிலும் வெளியான போதும், அந்த படங்களுக்கு கே.ஜி.எஃப் டஃப் கொடுத்து வருகிறது.

இந்தி சினிமாவில் கே.ஜி.எஃப் பல சாதனைகளை படைத்துள்ளது. அதிவேகமாக 250 கோடி ரூபாயை வசூல் செய்த படம் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மட்டும் 360 கோடியை தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை ரூ.5 கோடியை வசூல் செய்த இந்தப் படம், சனிக்கிழமை 7 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 9 கோடியும் வசூலித்துள்ளது. டங்கல், பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களை தொடர்ந்து உலக அளவில் ரூ.1000 கோடியை வசூல் செய்த நான்காவது இந்திய படமாக கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் உருவெடுத்துள்ளது. தற்போது டங்கல் படத்தின் இந்தி மொழி வசூலை முறியடிக்கும் முனைப்பில் அதன் வசூல் சாதனை வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.  டங்கல் திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ374 கோடியை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழத்திலும் கே.ஜி.எஃப்-2 படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் 350 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், முதல் நாளில் இருந்தே பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்தப் படத்திற்கு முதல் நாளான ஏப்ரல் 13ம் தேதி விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டால் கே.ஜி.எஃப் படத்தின் வசூல் பாதிக்கும் என பேசப்பட்ட கருத்த்துகளை எல்லாம் அதன் வசூல் மழை பொய்ப்பித்து விட்டது என்றே சொல்லலாம். முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. 

தற்போது மூன்று வாரம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை எட்டியுள்ளது. அதுவும், இன்று இரவு காட்சிக்குள் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிடும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மற்ற மொழியில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமான ’பாகுபலி 2’ தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. இதையடுத்து, தற்போது ’கேஜிஎஃப் 2’ 100 கோடி ரூபாய் என்ற இலக்கை தாண்டி இருக்கிறது.

தமிழ் சினிமா படங்கள் மட்டுமே தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து வந்த நிலையில், தற்போது மற்ற மொழித் திரைப்படங்களும் தமிழகத்தில் 100 கோடி வசூல் என்ற இலக்கை தாண்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.