சினிமா

தள்ளிப்போகும் ’கேஜிஃஎப் 2’ ரிலீஸ்: விரைவில் புதிய தேதி?

தள்ளிப்போகும் ’கேஜிஃஎப் 2’ ரிலீஸ்: விரைவில் புதிய தேதி?

sharpana

’கேஜிஎஃப் 2’ வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனை செய்ததால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பின.

இதனால், வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. யாஷ் ரசிகர்கள் அன்று தேசிய விடுமுறை வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அதிர வைத்தனர். இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியா முழுக்க தினமும் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், கொரோனா அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜூலை 16 ஆம் தேதி வெளியாகவிருந்த ‘கேஜிஎஃப் 2’ படத்தினை கொரோனா குறைந்தபிறகு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் வேறு வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமான அறிவிக்கவிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.