சினிமா

"அடுத்த 2 வருடங்களில் 12 படங்கள் "- மெகா திட்டத்துடன் KGF, காந்தாரா தயாரிப்பாளர் பேட்டி!

நிவேதா ஜெகராஜா

“வருடத்துக்கு ஒரு பெரிய ஹிட் படம் என்பது எங்கள் இலக்கு” என கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியுள்ளார்

2022ல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படங்களின் பட்டியலில் கன்னட சினிமாவிலிருந்து வெளிவந்த கே.ஜி.எஃப் மற்றும் காந்தாரா படங்கள் இருந்தன. இரண்டு படங்களுக்குமே ஒரு தயாரிப்பு நிறுவனம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. Hombale என்ற ப்ரொடக்‌ஷனின் நிறுவனரான விஜய் கிரகந்தூர்தான் அந்த தயாரிப்பாளர். கே.ஜி.எஃப் படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படம்; அதுவே காந்தாரா கர்நாடகாவின் மங்களூர் பகுதியின் இறை வழிப்பாட்டு முறையையும், கலாசாரத்தை முதன்மைப்படுத்தியது. இப்படி இருவேறு தளங்களுடைய படங்களை தயாரித்தது குறித்தும், 2022-ல் வெளியான இப்படங்களால் 2023-ல் தன் படங்களுக்கான வெளி எந்தளவுக்கு விரிவடைந்துள்ளது என்பது குறித்தும் தனது சமீபத்திய பேட்டிகளில் பேசியுள்ளார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.

அவர் பேசுகையில், “இந்த இரு படங்களின் வெற்றியுமே, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான். இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தயாரிப்பு நிறுவனம் என எல்லோருமே இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது. அடுத்ததடுத்து எங்களுக்கு கிடைத்த வெற்றி, அடுத்த ஆண்டுக்கு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கே.ஜி.எஃப்-ஆ காந்தாராவா என்று கேட்டால், நான் காந்தாராவுக்குதான் முதல் சாய்ஸ் கொடுப்பேன். ஏனெனில் கே.ஜி.எஃப் வெற்றி நாங்கள் எதிர்பார்த்த வெற்றிதான். ஆனால் காந்தாரா திடீரென சர்ப்ரைஸ் ஹிட் ஆனது. அதுமட்டுமன்றி எங்கள் படத்தின் வழியே சமூக கருத்தொன்று சொல்லப்பட வேண்டும் என நான் எப்போதும் நினைப்பேன். அப்படியொரு படமாகவும் காந்தாரா அமைந்தது. இப்படியாக வசூல் ரீதியான வெற்றி மற்றும் அடுத்த தலைமுறைக்கு இந்திய கலாசாரத்தை கற்பித்தது போன்ற விஷயங்களின் காரணங்களால் காந்தாரா முதன்மை இடத்தில் இருக்கிறது.

இரு படங்களின் வெற்றியினால், இப்போது நாங்கள் பன்மொழிகளில் படங்களை உருவாக்குகிறோம். அந்தவகையில் கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அடுத்த வருடம் எங்களுக்கு படங்கள் இருக்கிறது. பாலிவுட்டில்லும் சில நல்ல படங்களை இயக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கதைகள் கேட்பது, நடிகர்களை முடிவு செய்வது என பல விஷயங்கள் நடந்துக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும், ஒரு ஹிட் படமாவது கொடுக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 2022-ல் கே.ஜி.எஃப் 2, காந்தாரா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாயின. 2023ல் சலார் படம் பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவற்றுடன் ஃபகத் ஃபாசிலின் Dhoomam, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ்ப்படமான ரகு தாத்தா, கே.ஜி.எஃப் பட  புகழ் ப்ரசாந்த் நீல் எழுத்தில் பகீரா உள்ளிட்ட படங்களும் 2023-ல் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இவைதவிர கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பேரனான யுவ ராஜ்குமாரை திரைக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்.

இவை மட்டுமன்றி அடுத்த 5 ஆண்டுகளில் 3000 கோடி முதலீட்டுத் திட்டமும் எங்களுக்கு உள்ளது. அடுத்த இரு வருடங்களில் 10 முதல் 12 படங்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றுள்ளார்.