சினிமா

அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு தள்ளி போனது "கேஜிஎஃப் 2' - ரசிகர்களுக்கு ’ஷாக்’ கொடுத்த அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு தள்ளி போனது "கேஜிஎஃப் 2' - ரசிகர்களுக்கு ’ஷாக்’ கொடுத்த அறிவிப்பு

PT WEB

கே.ஜி.எஃப்2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். ஆரம்பத்தில் கன்னடத்தில் வெளியான இந்த படம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான போஸ்டர் ஒன்றுடன் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், முதல் பாகத்தில் நாம் பார்த்த குழந்தையை அரவணைத்து இருக்கும் தாயின் படம் உள்ளது. அதேபோல், இரண்டாம் பாகத்திற்காக டீசரில் இடம்பெற்றிருந்த யஷ் துப்பாக்கி சுடுவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரது கதாபாத்திரங்களும் முழுதாக இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. வானில் கழுகுகள் வட்டமிட்டபடியும், தங்கச் சுரங்கத்தில் டேங்கர் துப்பாக்கியும், கோட்டையின் தோற்றமும் அதில் இருக்கின்றது. 

முதலில் படம் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக டிசம்பருக்கு தள்ளிப் போனது. தற்போது கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. இந்த அறிவிப்பு யஷ் மற்றும் கே.ஜி,எப் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.