நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகாரை முன்வைத்துள்ள நிலையில் கர்நாடாக திரைப்பட வர்த்தக சபை முக்கிய முடிவெடுத்துள்ளது.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். அதேபோல நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகாரை மீ டூ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது ‘விஷ்மயா’ படப்பிடிப்பின் ஒத்திகை காட்சி ஒன்றில் தவறான முறையில் அர்ஜூன் தன்னை தீண்டியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படும் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதேசமயம் அலுவலக ரீதியான புகார்களை பதிவு செய்யும்போது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது. அதேபோல கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் ரா கோவிந்து இதுகுறித்த கூறும்போது, ஸ்ருதி ஹரிஹரன் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க சிலரோ, ஸ்ருதி ஹரிஹரன் விளம்பர நோக்கில் பொய் புகார் கூறுவதாக தெரிவித்தனர். ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு வெளியே போராடிய சிலர், அவரை கர்நாடாக திரைப்பட வர்த்தக சபையிலிருந்து தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த விவகாரம் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடாக திரைப்பட வர்த்தக சபை இதுகுறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான அர்ஜுன் ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பை உருவாக்கி அதன்மூலம் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது. அதேசமயம் அர்ஜுன் தன் மீது புகார் கூறியுள்ள ஸ்ருதி ஹரிஹரன் மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Courtesy: TheNewsMinute