சினிமா

"மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன்" - யார் இந்த பாடகி நஞ்சியம்மா?

webteam

மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன் என்று கூறிய பழங்குடியின பாடகி நஞ்சியம்மா, ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

அனுபவமே பாடல் வரிகள், உணர்வுகளே மெட்டு, இயற்கையே இசை.... இப்படியான ஒரு பாடல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது... காடு மலைகளில் அலைந்து திரிந்து, உழைப்பின் களைப்பகல, உள்ள மொழியால் பாட்டிசைக்கும் பழங்குடியினத்தின் பாட்டி நஞ்சியம்மா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்..

சுதி பிசகாமல், சுரஸ்தானங்களில் கவனம் சிதறாமல் பாடிய பல பாடல்கள் தேசிய விருதுகளை வென்றிருக்கின்றன. பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடலுக்காக, முறையாக இசை பயின்று பாடியவர் தேசிய விருதை முன்பு வென்றிருக்கிறார். அந்த விருதாளர்களின் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர், மெய்யாகவே பாடறியாத, படிப்பறியாத, எண்ணங்களை இசைக்கும் நஞ்சியம்மா. இவர் கேரள மாநிலம் அட்டப்பாடியில் காடு மலைகளோடு கலந்து வாழ்கிறார்.

தேசிய விருதை அள்ளி வந்துள்ள இந்தப் பாடல், இருளர் பழங்குடியினர் காலங்காலமாக குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது பாடும் தாய்ப் பாடல்.... இந்தப் பாடல்தான் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் இடம் பெற்று உலகின் கவனத்தைக் கவர்ந்தது. இந்தப் பாடலை பாடச் சென்ற போது, எந்தப் படத்திற்காக பாடுகிறோம், படத்தில் யார் நடிக்கிறார்கள், பிஜூ மேனன் யார், பிருத்திவிராஜ் யார் என்று எதையும் அறிந்திருக்கவில்லை அந்த இயற்கையின் பாடகி.

கோவை மாவட்டம் ஆனகண்டிபுதூர் என்ற மலைப்பகுதியை சேர்ந்த நஞ்சியம்மா திருமணமாகி கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு இடம் பெயர்ந்தார். 13 வயது முதலே இவர் பாடி வருகிறார். ‘அய்யப்பன் கோஷியும்’ படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ள நஞ்சியம்மா, முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

எந்தக் கலையும் எளியோருக்குத் தூரமில்லை, வாழ்விலிருந்து விளையும் கலைகள் காலத்தால் அழியாது... எவ்வளவு காலமானாலும், உலகைக் கவரும் என்பதற்கு மற்றொரு சான்று பழங்குடியினப் பாட்டி நஞ்சியம்மா.