சினிமா

மோகன்லாலின் மாஸ் காட்சிக்கு எதிராக புகாரளித்துள்ள 'கேரள காவலர் சங்கம்'

webteam

மோகன்லாலின் லூசிபர் படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட மாஸ் காட்சிக்கு எதிராக கேரள காவலர் சங்கம் புகார் அளித்துள்ளது.

பிரபல நடிகரான பிரித்திவிராஜ் மோகன்லாலை வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் லூசிபர். இந்தப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் பிரித்திவிராஜ். இப்படம் கடந்த வாரம் வெளியாகி கேரளா மற்றும் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. காட்சிக்கு காட்சி மோகன்லாலை மாஸாக காட்டியிருப்பதால் மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட மாஸ் காட்சிக்கு எதிராக கேரள காவலர் சங்கம் குரல் எழுப்பியுள்ளது. அந்த காட்சியில் செருப்பணிந்த கால்களுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மோகன்லால் மிதிப்பது போல் இருக்கிறது. இந்த காட்சி படத்தின் போஸ்டருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த காட்சி குறித்து கேரள முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ள கேரள காவலர் சங்கம், மக்கள் மத்தியில் போலீசார் குறித்து தவறான பார்வையை மக்கள் மத்தியில் இந்த காட்சி விதைப்பதாக தெரிவித்துள்ளது. 

மேலும் ''முன்பெல்லாம் குற்றவாளிகள் தான் போலீசாரை தாக்குவார்கள். தற்போது இளைஞர்கள் கூட போலீசாரை தாக்குகின்றனர். இந்த மாதிரியான படங்கள் தான் போலீசாரை தாக்குவது போன்ற காட்சிகளை வைத்து இளைஞர்களின் மனதை கெடுக்கின்றன. புகையிலை, மது அருந்தும் காட்சி இடம்பிடிப்பது எந்த அளவுக்கு குற்றமாக கருதப்படுகிறதோ, அதே அளவு குற்றம் தான் இது மாதிரியான காட்சிகளும்'' என்று தெரிவித்துள்ளது.

போலீசாரின் இந்த புகாரை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தும், புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.  பொதுமக்கள் படத்தை படமாக மட்டுமே பார்ப்பார்கள் என்றும், அவர்களுக்கு திரைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் தெரியுமென்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.