லட்சுமி மேனன் எக்ஸ் தளம்
சினிமா

ஐ.டி. ஊழியரை தாக்கிய வழக்கு.. நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்!

ஐ.டி. ஊழியரைக் கடத்தி, தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Prakash J

ஐ.டி. ஊழியரைக் கடத்தி, தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமி மேனன், தமிழில் ’கும்கி’, ’சுந்தரபாண்டியன்’, ’வேதாளம்’, ’ரெக்க’, ’கொம்பன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றிருக்கிறார். தமிழ் மண்ணுக்கே உரிய முகமாக பார்க்கப்பட்ட லட்சுமி மேனனை, தமிழ் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில், ஆகஸ்ட் 25ஆம் தேதி இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. ஐடி ஊழியர் உட்பட ஒரு கும்பலுக்கும், நடிகை லட்சுமி மேனன் மற்றும் நண்பர்கள் அடங்கிய கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஐடி ஊழியர் தனது காரில் ஏறி புறப்பட முயன்றபோது, லட்சுமி மேனனின் நண்பர்கள் அடங்கிய கும்பல், ஐடி ஊழியரை தங்கள் காருக்குள் ஏற்றி கடத்திச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகை லட்சுமி மேனன்

மேலும், லட்சுமி மேனன் உடன் இருந்த சிலர் ஐடி ஊழியரை தாக்குவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஐடி ஊழியர், கொச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடிகை லட்சுமி மேனனுக்கும் இந்த வழக்கில் தொடர்புபிருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐ.டி. ஊழியரைக் கடத்தி, தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஐ.டி. ஊழியர் தரப்பு சமரசம் செய்துகொள்வதாகவும், மேற்கொண்டு விவகாரத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றம் லட்சுமி மேனனின் முன்ஜாமீன் மனுவை ஏற்று, ஜாமீன் வழங்கியுள்ளது.