சினிமா

பாலிவுட் சினிமாவிற்கு போகிறார் கீர்த்தி சுரேஷ்?

பாலிவுட் சினிமாவிற்கு போகிறார் கீர்த்தி சுரேஷ்?

webteam

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவிற்கு செல்ல இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

தமிழில் நன்கு அறிமுகமான இளம் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதுவரை கதையம்சம் அதிகம் இல்லாத படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தனது நடிப்பை வெளிப்படுத்த இப்படம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும்,கடந்த ஆண்டு இவரது நடிப்பில்‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சாமி2’, ‘சண்டகோழி2’ போன்ற படங்களும் வெளியாகின.

‘நடிகையர் திலகம்’ படத்திற்கு முன்பே இவரை சந்தித்து ‘சர்கார்’ கதையை விவரித்து இப்படத்தில் நடிப்பதற்கான கால்ஷீட்டை வாங்கியிருந்தார் இயக்குநர் முருகதாஸ். இந்தப் படத்தில் கீர்த்திக்கு நடிப்பதற்கான அதிக வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. அதனை இயக்குநர் முருகதாஸே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு கதையை அவரிடம் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  

இந்நிலையில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள ரஜினிகாந்த் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவல் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆகவே இதனை அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. 

இதனிடையே கீர்த்தி சுரேஷ், பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை அஜித்தின் புதிய பட தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. இதனை ‘பதாய் ஹோ’ பட இயக்குநர் அமித் ஷர்மா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது பாலிவுட் வட்டாரம். ஆனால் இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் எந்தவித விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை.