சினிமா

சிறையிலிருந்த தாயை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த கவின்..!

சிறையிலிருந்த தாயை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த கவின்..!

Rasus

சிட்பண்ட் பண மோசடி வழக்கில் கைதாகியிருந்த தன்னுடைய தாய் ராஜலட்சுமியை நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான கவின் ஜாமீனில் மீட்டுள்ளார்.

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி. இவரும், இவருடைய கணவர் அருணகிரி, மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி உள்ளிட்டோர் 1998-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை முறையான அனுமதியின்றி ஒரு சீட்டு கம்பெனியை நடத்தி வந்துள்ளனர். அவர்கள் நடத்திய நிறுவனத்தில் திருச்சியை சேர்ந்த 34 நபர்கள் பணம் கட்டியுள்ளனர். ஆனால் இவர்கள் யாருக்கும், சீட்டு கம்பெனி நடத்தி வந்த தமயந்தி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் 2007-ம் ஆண்டு திருச்சி பொருளாதர குற்றவியல் பிரிவில் புகார் கொடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் சீட்டு கம்பெனி நடத்தியவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் தமயந்தி, ராஜலட்சுமி உள்ளிட அனைவருக்கும் மோசடி வழக்கில் ஐந்து ஆண்டு சிறையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோசடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகிய இருவரும் மரணமடைந்துவிட்டதால், தமயந்தி, ராஜலட்சுமி உள்ளிட்டவர்களை கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் ராஜலட்சுமி என்பவர் நடிகர் கவினின் தாய். ஆனால் அவர் கைது செய்யப்பட்டபோது, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். இதனால் கவினின் தாய் கைது செய்யப்பட்ட விவரம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள கவின், தன்னுடைய தாய் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவர்களை ஜாமீனில் எடுக்கும் வேலைகளில் இறங்கினார். இதையடுத்து தற்போது ராஜலட்சுமி, தமயந்தி உள்ளிட்டோரை கவின் ஜாமீனில் எடுத்துள்ளார்.

மேலும் தன்னுடைய பாட்டி நடத்திவந்த சீட்டு கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் கவின் கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.