சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படம், ஒரு நாள் தாமதமாக மே 15 அன்று வெளியானாலும், ரசிகர்களின் பெரும் வரவேற்பில் மூன்று நாளில் உலகளவில் 147 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு, பாலாஜியின் கதை சொல்லல் ஆகியவை பாராட்டப்பட்டு, இது சூர்யாவின் ரியல் கம்பேக் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் சில பண நெருக்கடி காரணமாக ஒருநாள் கழித்து மே 15ம் தேதி தான் வெளியானது.
இந்தசூழலில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையில் திரையரங்கில் வெளியான படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். `கருப்பு' படக்குழுவினர் நேற்று முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த வீடியோக்களும், படத்தின் முடிவில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி உணர்ச்சி வசப்பட்டு கத்திய வீடியோவும், கண்ணீருடன் சூர்யா வெளியிட்ட நன்றி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.
நடிகர் சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும், ஆர்ஜே பாலாஜி கதையை நகர்த்திய விதம் ரசிக்கும்படி இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இதுதான் சூர்யாவின் ரியல் கம்பேக் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்தசூழலில் தான் பாசிட்டிவ் விமர்சனங்களோடு வசூலிலும் கருப்பு திரைப்படம் அசத்திவருகிறது என்ற அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், 4வது நாளில் காலடி வைத்திருக்கும் கருப்பு திரைப்படம் தற்போது வரை உலகளவில் 147 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சூர்யாவிற்கு இதுவரை உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக சிங்கம் 2, 24 படங்களே இருந்துவரும் நிலையில் கருப்பு திரைப்படம் அப்படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.