karumegangal kalaikindrana
karumegangal kalaikindrana  twitter
சினிமா

மக்களின் பார்வையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ - இயக்குநர் தங்கர்பச்சான் முன்னெடுத்த புதிய முயற்சி!

Prakash J

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் முதன் முதலாக கடந்த 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் ’அழகி’ படத்தை இயக்கியிருந்தார். அந்த ஆண்டின் பெரும் வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்ததோடு, சிறந்த பின்னணி பாடகியாக பாட்டுச் சொல்லி பாடச்சொல்லி பாடலுக்காக சாதனா சர்கமிற்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான களவாடிய பொழுதுகள் படம்தான் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்.

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நீண்டநாட்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம், ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நடிகர்கள் அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ட்ரெய்லர் சமீபத்தில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்திற்கான புரமோஷன் பணிகளில் இயக்குநர் தங்கர்பச்சான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் பல்வேறு முன்னெடுப்புகளை வித்தியாசமான எடுத்து வருகிறார்.

அந்தவகையில் ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, இந்தப் படத்திற்கான சிறப்புக் காட்சி ஒன்றை திரையிட ஏற்பாடு செய்தனர். பொதுவாக ஒரு படம் வெளியாகும் முன்பு, திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்குத்தான் சிறப்புக் காட்சியை வெளியிடுவார்கள். ஆனால், தங்கர் பச்சான் முதன்முறையாக பொதுமக்கள் பார்க்கும்வண்ணம் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதுகுறித்து பொதுமக்களும், ரசிகர்களும் தெரிவித்த கருத்துகளைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தங்கர் பச்சான் பதிவிட்டுள்ளார். அதில் ஓர் இளம்பெண், “இந்த மூவியில் எமோஷன், கனெக்ட் என அனைத்தும் உள்ளது. இப்படத்தில் தன்னைக் கவர்ந்தது கவுதம் வாசுதேவ் மேனன் கேரக்டர்” என்கிறார். இன்னொரு இளம்பெண், “என்னை, என் அப்பா பெரிதா மூவிக்கு அழைத்துச் செல்ல மாட்டார். இதற்காக என்னை அழைத்துச் சென்றார். இதில் அப்பா கேரக்டர் அருமையாக உள்ளது” என்று சொல்லும் அவர், “இந்தப் படத்தை எல்லோரையும் பார்க்கச் சொல்வேன்” என்று கூறி மகிழ்கிறார்.

மேலும் சிலர், அப்பா செண்டிமெண்ட் பற்றியே அதில் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். அதைப் பார்த்து தங்களுக்கு அழுகை வந்துவிட்டதாகவும் கூறுகின்றனர். அதைக் கேட்டு ஓர் இளம்பெண் கண்ணீர் வடிப்பதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இறுதியில் அந்த வீடியோவில் பேசும் இயக்குநர் தங்கர் பச்சான், “நானும் 1990முதல் படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒரே நம்பிக்கை என்னுடைய மக்கள்தான்” என்கிறார்.

ஏற்கெனவே இப்படம் குறித்து எழுத்தாளர் தமிழ்மகன், தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிறப்பான முறையில் விமர்சனம் எழுதியிருந்தார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ”எழுத்தாளர் தமிழ்மகனுக்கு நன்றி. ஆயிரம் தீர்ப்புகள் வழங்கிய நீதிபதி, தனக்குத் தானே வழங்கிக் கொள்ளும் தீர்ப்பின் கதை 'கருமேகங்கள் கலைகின்றன'. அன்பு அண்ணன் தங்கர்பச்சான் அவர்களின் நெறியாள்கையில் வெளிவந்திருக்கும் இன்னொரு காவியம்.

எழுத்தாளர் தமிழ்மகன்

தனக்குப் பிறந்த பெண்ணைத் தேடி அலையும் நீதிபதி ஒருபுறம். தனக்குப் பிறக்காத மகளைத் தேடி அலையும் புரோட்டா மாஸ்டர் இன்னொரு புறம். தொடர்பு இல்லாத இரண்டு கதைகள் ஒரு புள்ளியில் சங்கமிக்கும் தருணத்தை அற்புதமான திரை காவியமாக தந்திருக்கிறார் தங்கர் பச்சான். எட்டு வயது சாரல் முதல் 80 வயது பாரதிராஜா வரை ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அளவெடுத்து தைத்ததுபோல் வேடப்பொருத்தம்.

திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னரே மக்கள் பார்வைக்குவைத்தார். ஏறத்தாழ 500 பேர் படத்தைப் பார்த்தார்கள். நானும் சென்றிருந்தேன். 'அழகி திரைப்படத்தை நூறு முறை விநியோகிஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினேன். பலரும் பிடிக்கவில்லை என்றார்கள். ஆனால் மக்கள் மாபெரும் வெற்றியை தந்தார்கள். நீங்கள் தரும் தீர்ப்புக்காக நம்பிக்கையுடன் உங்கள் முன் நிற்கிறேன்' என்றார்.

மக்கள் விரும்பியதை கண்கூடாக பார்த்தேன். திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். படத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் தமிழ்மகனுக்கு நன்றி என்று கார்டு போட்டு இருக்கிறார். நன்றி அண்ணா” எனப் பதிவிட்டுள்ளார்.