கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா web
சினிமா

'Love Laughter War'.. சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

Rishan Vengai

பாகுபலி, கே.ஜி.எஃப், பதான் என இந்திய சினிமாவில் மற்ற திரையுலகினர் பேன் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாட்டிலும் சக்கப்போடு போட்ட நிலையில், 'தமிழ்சினிமா என்ன தான் பா பண்ணிட்டு இருக்கிங்க' என்ற குரல் பெரிதாக எழுப்பப்பட்டது. அதற்கு பதிலாக விஜயின் லியோ திரைப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அப்படம் எதிர்ப்பார்த்த அளவு சிறப்பாக செல்லவில்லை.

surya

இந்நிலையில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் “கங்குவா” திரைப்படம், தமிழ்சினிமாவின் மானத்தை காப்பாற்றும் என்ற பெரிய நம்பிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பீரியட் திரைப்படமாக உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், சூர்யாவின் 43வது படமாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானதாக அறிவிக்கப்பட்டது. அந்தப்படம் தொடங்குவதற்கு சிறிதுகாலம் தேவைப்படுகிறது என சூர்யா சமீபத்தில் தெரிவித்த நிலையில், சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுடன் கைக்கோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்!

ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதலிய ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்துள்ளார். இதை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் தங்களுடைய எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போஸ்டர் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ், “எனது அடுத்த படம் எப்போதும் சிறந்தவரான சூர்யாவுடன் இருக்கப்போகிறது. அவருடைய 44வது படத்தை இயக்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யா வெளியிட்டிருக்கும் பதிவில், ”புதிய தொடக்கம், உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Love Laughter War’ என்ற டேக் லைனுடன் அறிவிக்கப்பட்டிருக்கும் சூர்யாவின் 44வது படத்தை, நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கயுள்ளது.