சினிமா

ஐ’போனில் எடுக்கப்பட்ட “கார்த்திக் டயல் செய்த எண்”

subramani

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘2010’-ல் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அப்படம் தமிழக இளைஞர்களால் பெரிதாக கொண்டாடப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிம்பு மற்றும் த்ரிஷா இருவரையும் வைத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. 

ஐ போனில் எடுக்கப்பட்ட இப்படத்தில், சிம்பு தனது வீட்டில் இருந்தும் த்ரிஷா அவரது வீட்டில் இருந்தும் செல்போனில் உரையாடுவதுபோல காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 'இந்த குவாரண்டையின் காலம்' பற்றியும் 'கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு எப்போது துவங்கும்' என்பது குறித்தும், தனது காதல் நினைவுகள் பற்றியும் கார்த்திக் ஜெஸ்ஸியிடம் பேசுகிறார்.  படத்தில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

இக்குறும்படம் ஐபோனில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதனால் மேக்கிங் விஷயத்தில் நாம் குறுக்கு விசாரனை எதுவும் செய்யத் தேவையில்லை. கொரோனா காலத்தில் இது ஒரு நல்ல முயற்சிதான். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இக்குறும்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். த்ரிஷா பேசும்போது ஒரு இடத்தில் “நீ என்னோட மூனாவது குழந்தை கார்த்திக்” என்கிறார். இதனை உள்ளபடியே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வசனத்தை மட்டுமல்ல இப்படத்தின் காட்சிகள் பலவும் நெட்டிசன்களின் கைகளில் மாட்டிக்கொண்டு நேற்று இரவு முதல் படாதபாடு பட்டு வருகிறது. 

சினிமாவில் மேஜிக் ஒரு முறை தான் நிகழும், அது 2010’ல் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’வில் நிகழ்ந்துவிட்டது. மீண்டும் அதனை தற்போது நிகழ்த்த முயற்சித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அது கைகூடவில்லை. என்றாலும் இக்குறும்படம் பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் கொண்டாடிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் நாட்களை நினைக்கத் தூண்டுகிறது. விமர்சனங்கள் பலவாக வைக்கப்பட்டாலும் இந்த நெருக்கடியான கொரோனா காலத்திலும் கூட புது முயற்சியாக ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டையும் பெற்றிருக்கிறது. மொத்தமாக 12:23 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.