Karate Kid: Legends movie review
சினிமா

Karate Kid: Legends REVIEW | ஜாக்கி சானின் நாஸ்டால்ஜிக் சண்டைப்பயணம்

பழைய நினைவுகளை மீட்டும் கராத்தே கிட்: ஜாக்கி சானின் சண்டை கலை பயணம்

Johnson

மாஸ்டர் ஹான் (Jackie Chan) நடத்தும் குங்ஃபூ பள்ளியில் பயிலும் மாணவர் லீ ஃபாங் (Ben Wang). லீயின் அம்மாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க, மேம்பட்ட வாழ்க்கை தரத்திற்காக அமெரிக்கா வருகிறார்கள், தாயும் மகனும். புதிய பள்ளி, புதிய மனிதர்கள் என திகைக்கும் லீக்கு அறிமுகமாகிறார் மியா (Sadie Stanley). பீட்ஸா ஷாப் ஒன்று நடத்தி வரும் மியாவின் தந்தை விக்டருக்கும் (Joshua Jackson) பரிட்சயமாகிறார் லீ.

கடன் பிரச்சனையில் சிக்கும் விக்டர், முன்னாள் பாய் ஃப்ரெண்ட் கார்னர் கொடுக்கும் டார்ச்சரில் மியா என இருவரின் பிரச்சனைகளையும் பார்க்கிறார் லீ. கடந்த காலத்தில் நிகழ்ந்த இழப்பு ஒன்றால், இனி சண்டை செய்ய மாட்டேன் என அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்த லீ, Five Boroughs Tournament என்ற சண்டை போட்டியில் கலந்து கொள்ள நேர்கிறது. இதன் பிறகு என்ன ஆகிறது? லீயின் கடந்த காலம் என்ன? ஜாக்கி சானுக்கு இந்த கதையில் என்ன வேலை? இதை எல்லாம் சொல்கிறது Karate Kid: Legends.

கராத்தே கிட் முதல் நான்கு பாகங்கள் + 2010ல் வெளியான ஜாக்கிசான் நடித்த கராத்தே கிட் இரண்டையும் இந்தப் படத்தில் இணைத்த விதம் சிறப்பு. அதுவே படத்தின் மீதான ஒரு ஈர்ப்பையும், சின்ன நாஸ்டால்ஜி தன்மையையும் கொடுக்கிறது. கடந்த பாகத்தை போன்றே, இந்த பாகத்திலும் வாழ்க்கை தரும் பயங்களில் இருந்து விடுபடுதலையே இந்த பாகமும் பேசியிருக்கிறது. சென்ற பாகம் நின்று நிதானமாக சொன்னவற்றை, இந்தப் படம் ஒரு ராக் சாங் போல் பரபரப்பாக சொல்கிறது.

நடிகர்களில் பெரிதாக கவர்வது ஜாக்கிசான்தான். சீரியஸாக பேசும் அதே தருணத்தில் அவர் செய்யும் சின்ன காமெடி நம்மை அத்தனை மகிழ்ச்சி ஆக்குகிறது. "வாழ்க்கையில் நமக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியணும். இந்தப் போராட்டத்துக்கு இது தகுதியானதா? இல்லையா?" என்ற அவரின் வசனம் வரும் இடமும் நன்றாக இருந்தது. லீயாக நடித்திருக்கும் பென் வாங், சண்டையை தவிர்ப்பதும், பழைய நினைவுகளால் தவிப்பது, புது தோழியிடம் காதலை மறைப்பது என பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். மியாவாக வரும் சேடி அவளது தந்தையாக வரும் ஜோஷ்வா ஜாக்சன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். 80களில் வெளியான கராத்தே கிட் படத்தில் நடித்த ரால்ஃப் வரும் காட்சிகளும் நன்று. இவர்கள் தவிர லீயின் அம்மா உட்பட வேறு எந்த பாத்திரமும் அழுத்தமாக இல்லை.

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இதற்கு என எந்த தனித்துவமும் இல்லாமல் இருப்பதே. 2010ல் வந்த கராத்தே கிட் படத்தில் இருந்தவற்றில் என்ன எல்லாம் இருந்ததோ, அதையே மீண்டும் எடுத்திருப்பதை போன்ற எண்ணத்தை தான் தருகிறது. மாறாக இந்தப் படம் சொல்லும் கருத்தோ, வன்முறைக்கு எதிரான வாதமோ, வாழ்க்கையின் மீதான தத்துவமோ எதுவம் இல்லாமல் வெறுமனே ஒரு பரபரப்பான சண்டைப்படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. Jonathan Entwistle அங்குதான் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறார். படத்தின் திரைக்கதையிலும் ஒரு சீரே இல்லாமல் ஏனோ தானோவென நகர்கிறது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஒரு பொழுதுபோக்குப் படம் என்ற அளவில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது படம்.