சினிமா

சி.சங்கரன் நாயரின் சொல்லப்படாத கதை... சினிமாவாகிறது 'ஜாலியன் வாலாபாக்' பின்புலம்!

நிவேதா ஜெகராஜா

ஜாலியன் வாலாபாக் படுகொலையை பின்னணியாக கொண்டு பாலிவுட் சினிமா ஒன்று எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக, இந்தியர்கள் அனைவரின் மனதிலும் நீங்காமல் மறைந்திருக்கும் சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. சுதந்திர வரலாற்றில் இன்னும் ரத்தக்கறையாக படித்துள்ள இந்தச் சம்பவம் நிகழ்ந்து 102 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஜாலியன் வாலாபாக் படுகொலை அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது ஜாலியன் வாலாபாக் பூங்கா என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது.

பைசாகி பண்டிகை நாளன்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது, ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அப்போது மிரண்டு ஓடிய மக்கள் அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து சாக நேர்ந்தது. இந்தக் கொடூரமான சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் இறந்தனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 1,650 தடவை சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் அரசின் கணக்குப்படி மட்டும் மொத்தம் 379 பேர் இந்தக் கோர துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். ஆனாலும் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1000 பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை பின்னணியாக வைத்து இப்போது சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது. பிரபல பாலிவுட் சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் இந்தப் படத்தை தனது பேனரில் எடுக்க இருக்கிறார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையை பின்னணியாக கொண்டு, படுகொலை பற்றிய உண்மையை வெளிக்கொணர ஆங்கிலேயருக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய சி.சங்கரன் நாயர் குறித்துதான் படம் பேசவிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், வைஸ்ராயின் செயற்குழு உறுப்பினருமான சி.சங்கரன் நாயர், சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர், நீதிபதியாக பணியாற்றியவர்.

தனது பணிக் காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய உண்மையை வெளிக்கொணர ஆங்கிலேயருக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தினார். சங்கரன் நாயரின் பேரன் ரகு பாலாட் மற்றும் அவரது மனைவி புஷ்பா பாலாட் ஆகியோர் இந்தப் பின்னணியை 'தி கேஸ் தட் தி எம்பயர்' என்ற புத்தகமாக வெளியிட்டனர்.

இந்தப் புத்தகத்தை தழுவி, கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், `சி சங்கரன் நாயரின் - தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற தலைப்பில் படம் எடுக்கப்பட இருக்கிறது. கரண் சிங் தியாகி என்பவர் இயக்க இருக்கிறார். படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும், "ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய உண்மையை வெளிக்கொணர பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சங்கரன் நாயர் போராடிய புகழ்பெற்ற நீதிமன்ற போராட்டத்தை இந்தப் படம் பேசும். சங்கரன் நாயரின் துணிச்சல் நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்தை பற்றவைத்தது மற்றும் உண்மைக்காக போராடும் சக்திக்கு ஒரு சான்றாக அமைந்தது" என்றும் தர்ம புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.