ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022இல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `காந்தாரா'. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் ப்ரீகுவலாக உருவாகியுள்ளது `காந்தாரா சாப்டர் 1'. இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு ஒரு கூடுதல் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாசாரமான, பூதகோலா மரபைப் பதிவுசெய்த தேசிய விருது பெற்ற, ’காந்தாரா’ படத்தைக் கொண்டாடும் விதமாக இந்திய தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 22-ஆம் தேதி பெங்களூருவில் `காந்தாரா' படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின் கலாசாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் தத்துவமான, ’காயகவே கைலாச’ என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார் நிகழ்வை மேலும் சிறப்பாக்கினார்.