கன்னடத் திரை உலகில் நடமாடும் போதைப் பொருள் கலாச்சாரத்தை வெளிக் கொணர விரும்புவதாக கூறிய இயக்குனரும், பத்திரிக்கையாளருமான இந்திரஜித் லங்கேஷிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னதாக இதுகுறித்து லங்கேஷ் பேசுகையில் “ கன்னடத்திரையுடகில் போதைப் பொருள் கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் செயல்படுகிறது. சில முக்கிய கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் பார்டிகளில் இதனை உபயோகப்படுத்துகின்றனர். கன்னடத்திரையுலகில் தலைவிரித்தாடும் இந்தப் போதைப் பொருள் கலாச்சாரம் குறித்து என்னிடம் நிறைய தகவல்களும், அது தொடர்பாக நடந்த சம்பவங்களும் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட போதைப் பொருளை உட்கொண்ட நடிகர் ஒருவர் ஸ்வாங்கி காரில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். காவல்துறை எனக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தால் கன்னட திரையுலகத்தில் நடமாடும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்த உண்மையான தகவல்களையும் சம்பவங்களையும் நான் கூறுவேன்.” என்று கூறினார்.
இதற்கு எதிர்குரல் எழுப்பிய சிலர், கன்னடத்திரையுலகில் மது விருந்து நிகழ்ச்சிகள் நடக்கிறது எனவும் ஒரு போதும் லங்கேஷ் கூறியது போல போதைப் பொருள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்ததில்லை எனவும் கூறினர்.
இந்திரஜித்தின் கோரிக்கையை ஏற்ற சிசிபி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கன்னடத் திரையுலகில் நடமாடும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்த உண்மையான தகவல்களை தங்களிடம் பகிர்ந்து போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்ட உதவிபுரிமாறு கூறி இந்திரஜித்துக்கு சம்மன் அனுப்பியது. மேலும் அதில் அவர் கூறும் ஒவ்வொரு தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டது.
இந்நிலையில் சிசிபி யின் கோரிக்கையை ஏற்று சிசிபி அலுவலகத்திற்குச் சென்ற லங்கேஷிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் சில முக்கிய இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தானாக முன்வந்து கன்னடத்திரையுலகில் நடமாடும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட லங்கேஷுக்கு அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமல்லாது அண்மையில் மூன்று பேர் கொண்ட போதைக்கும்பலை பிடித்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு தலைமையகம், இந்தக் கும்பல் கன்னட திரையுலகில் பணியாற்றி வரும் சில முக்கிய இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு போதைப் பொருள் வழங்கிவந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.