கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், சிவராஜ் குமார். கிட்டத்தட்ட 50 வருடங்கள் திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர், தற்போது வரை 125 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்திலும், நடிகர் தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்திருந்தார். அவர் கடைசியாக, ’பைரவி ரணகல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி வெளியானது. இதற்கிடையில் நடிகர் சிவராஜ் குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நல பிரச்னை இருப்பதாகவும், அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு புளோரிடாவின் மியாமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து மருத்துவனை நிர்வாகத்தினர், சிவராஜ்குமாருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சீரான நிலையில் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.