கன்னட நடிகர் குரு ஜக்கேஷை அடையாளம் தெரியாத ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான ஜக்கேஷின் மகன் குரு. இவர் கன்னட படங்களில் நடித்துவருகிறார். தமிழில் வெளியான ’7 ஜி ரெயின்போ காலனி’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து பிரபலமானவர் இவர். பெங்களூரில் வசித்துவரும் குரு, தனது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு இன்று காலை காரில் சென்றார். ஆர்.டி.நகரில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டபின் திரும்பும்போது, எதிரில் இளைஞர் ஒருவர் பைக்கை தாறுமாறுமாக ஓட்டி வந்தாராம். இதை குரு தட்டிக்கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குருவின் தொடையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து குரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயப்படும் வகையில் எதுவுமில்லை என குருவின் தந்தை ஜக்கேஷ் கூறியுள்ளார்.