சினிமா

விருது நிகழ்ச்சிக்கு அணிந்து செல்ல உடை கூட இல்லை - நினைவுகளை பகிர்ந்த கங்கனா!

விருது நிகழ்ச்சிக்கு அணிந்து செல்ல உடை கூட இல்லை - நினைவுகளை பகிர்ந்த கங்கனா!

webteam

தன்னுடைய முன்னாள் காதலர் தன்னை பணத்தாசை பிடித்தவள் என்று கூறியதாகவும் அதனால் சில தீர்க்கமான முடிவுகளை எடுத்ததாகவும் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டா பக்கம் மூலம் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் திரையுலகம் குறித்தும், தான் கடந்து வந்த பாதை குறித்தும் பேசினார். அதில், என்னுடைய முன்னாள் காதலர் என்னை பணத்தாசை பிடித்தவள் எனக் கூறினார். அவரின் வார்த்தைகளை எப்படி பொய் என நிரூபணம் செய்வது என அப்போது எனக்குத் தெரியவில்லை. அப்போது பணம் ஈட்ட வேண்டுமென்று முடிவு செய்தேன். சிறந்த வீடு வாங்க வேண்டும். என்னுடைய 50 வயதில் நான் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருக்க வேண்டுமென்றுமுடிவு செய்தேன்”என்றார்

பாலிவுட்டில் நுழைந்த தருணம் தனக்கு யாரும் உதவவில்லை எனக் கூறிய கங்கனா, தான் ஒரு நடிகர் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வராததால் யாரும் தன்னை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

''கேங்ஸ்டர் படத்திற்கு பிறகு நான் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும். அங்கு நான் விருது வாங்க வேண்டும். ஆனால் அணிந்து செல்ல என்னிடம் சரியான உடை இல்லை. அதை வாங்குவதற்கான பணமும் இல்லை. என் நண்பரும், ஆடை வடிவமைப்பாளருமான ரிக் ராய் தான் என் உடைக்காக ஸ்பான்சர் செய்தார். அவரும் கஷ்டகாலத்தில் தான் போராடினார். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

ரிக் செய்த உதவியால்தான் நான் பல விருது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிந்தது. அவர் எனக்காக சில உடைகளை உருவாக்கித் தரும் போது இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஒருவர் எனக்காக உதவி செய்வது மிகவும் அற்புதமானது. அவரெல்லாம் இல்லை என்றால் என்னால் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்ல முடியுமா? மேங்கோ டாப்ஸ் வகைகள் தான் என்னிடம் இருக்கும். அந்த நேரத்தில் அதுதான் நான் வாங்கக்கூடிய ஆடம்பரமான உடை. அந்த புள்ளியிலிருந்து நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இது ஆச்சரியமானது தான்'' எனத் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் குறித்து பேசிய கங்கனா, பாலிவுட் உலகின் நெபோட்டிச குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்தார். வெளிஆட்களை வாரிசு நடிகர்கள் ஒதுக்கி வைப்பதாக குற்றம்சாட்டினார்.