Kangana Ranaut ANI
சினிமா

முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை.. கங்கனா ரனாவத் கேட்ட கேள்வி?

பெண்களின் குணநலனை விமர்சிப்பது அவர்களை வீழ்த்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என கங்கனா ரனாவத் கூறினார். பெண்களை அவமதிக்கும் போக்கு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

பெண்களின் குணநலனை விமர்சிப்பது அவர்களை கீழே இறக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பெண்களை எப்படி நடத்துகிறோம் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

முன்னதாக, நேற்று சட்டப்பேரவையில் பேசிய விஜய், பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால், உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார்.

Kangana Ranaut

இந்தச்சூழலில் தான், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற நடிகையும் எம்.பியுமான கங்கனா ரனாவத்திடம் தமிழ்நாடு முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், பெண்களின் குணநலனை குறிவைப்பது அவர்களை வீழ்த்தும் முயற்சி என்று கூறினார். இந்தப் பிரச்சனை இந்தியாவில் மட்டும் இல்லை என்றும் உலகம் முழுவதும் இந்த நிலை இருக்கிறது. வேலை செய்யும் பெண்கள், வெற்றி பெற்ற பெண்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலரும் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள் என்றார். அதிகாரம் மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் பெண்களும் குறிவைக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தையும் கங்கனா சுட்டிக்காட்டினார். ஒரு பிரபல நடிகை தனது தனிப்பட்ட உறவுகள் தொடர்பாக குறிவைக்கப்பட்டதாக அவர் கூறினார். ஒரு உறவு என்பது இருவருக்கும் இடையிலானது என்று கங்கனா குறிப்பிட்டார். ஆனால், இதுபோன்ற விவகாரங்களில் பெண்களே அதிகமாக அவதூறு மற்றும் குணநலன் சார்ந்த தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்று கூறிய அவர் பெண்களை அவமதிப்பது மற்றும் இழிவுபடுத்துவது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.