கங்கனா ரனாவத், பிரியங்கா காந்தி எக்ஸ் தளம்
சினிமா

” ’எமர்ஜென்சி’யைக் காண வாருங்கள்” - பிரியங்கா காந்திக்கு அழைப்புவிடுத்த கங்கனா ரனாவத்!

'எமர்ஜென்சி' படத்தைக் காண வருமாறு நடிகை கங்கனா ரனாவத், வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி வதேராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Prakash J

இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், இயக்கி நடித்திருக்கும் படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் ஜனவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து 'எமர்ஜென்சி' படத்தைக் காண வருமாறு நடிகை கங்கனா ரனாவத், வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி வதேராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எமர்ஜென்சி

இதுகுறித்து அவர், “நான் பிரியங்கா காந்தியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். நான் அவரிடம் 'நீங்கள் என்னுடைய படத்தைப் பார்க்க வேண்டும்' என்றேன். இந்திராவைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். நான் அவரை மிகவும் கண்ணியமாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். நான் நேசிக்கும் தலைவர்களில் இந்திரா காந்தியும் ஒருவர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இப்படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய சீக்கிய அமைப்பினா், இப்படத்தை தடைவிதிக்கக் கோரியிருந்தனர். அதன்பிறகே தணிக்கைச் சான்றிதழ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.