சினிமா

கன்னடத்தில் பட்டையை கிளப்பும் “காந்தாரா”.. அக். 15ல் ரிலீஸ் ஆகும் தமிழ் வெர்ஷன்!

webteam

கன்னடத்தில் பட்டைய கிளப்பும் “காந்தாரா”.. அக். 15ல் ரிலீஸ் ஆகும் தமிழ் வெர்ஷன்!

கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள காந்தாரா திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் காந்தாரா திரைப்படம் வெளியானது. நிலம் மீதான அதிகாரம், சாதிய ஒடுக்குமுறை இவற்றுடன் அந்த இடத்துக்கான கலைகள், நாட்டார் தெய்வ வழிபாடு ஆகியவற்றையும் இணைத்து கமர்ஷியலான படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. கர்நாடகாவில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்கியதோடு மட்டுமல்லாமல் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள இந்தப் படம் வசூலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. கிஷோர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கன்னடத்திலே மற்ற மாநிலங்களில் வெளியாகி, வெளியிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. அதனால், மற்ற மொழிகளில் இந்தத் திரைப்படத்தை கே.ஜி.எப் போல் டப் செய்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் டப்பிங்கில் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பல் பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை எடுத்துள்ளது. அதனால், தமிழில் நன்றாகவே டப் செய்யப்பட்டுள்ளதாக ட்ரெய்லரை பார்க்கும் போது தோன்றுகிறது. நடிகர் கார்த்தி ட்ரெய்லரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ட்ரீம்ஸ் வாரியர் நிறுவனம் இந்தப் படத்தை இணைந்து வெளியிடுவதாக தெரிகிறது. கன்னடத்தில் பட்டைய கிளப்பி வரும் இந்தப் படத்திற்கு தமிழத்தில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. குறைந்த பட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓட வாய்ப்புள்ளது.

படத்தின் கதை சுருக்கம்:

19ம் நூற்றாண்டில் குந்தபுராவின் அரசன் தனக்கு நிம்மதி தரும் பஞ்சுலி என்ற தெய்வத்தைக் கண்டுபிடிக்கிறார். அது பழங்குடிகளுக்கு சொந்தமானதாக இருக்க, அவர்களுக்கு நிலங்கள் வழங்கி அதற்கு பதிலாக தெய்வத்தை எடுத்துக் கொள் என சாமியாடி மூலம் சொல்கிறது பஞ்சுலி. எந்த காலத்திலும் கொடுத்த வாக்கை மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கையும் செய்கிறது பஞ்சுலி. ஆனால், அந்த நிலத்தை திரும்பப் பெற அரசனின் அடுத்த தலைமுறையினர் முயல்கின்றனர். அதனால் சில அசம்பாவிதம் நிகழ்கிறது. ஆனாலும் நிலத்தைப் பிடுங்கும் முயற்சி மட்டும் நிற்கவில்லை.

படத்தின் கதை நிகழ்காலத்தை நோக்கி நகரும் போது பழங்குடியின் தரப்பில் சிவா (ரிஷப் ஷெட்டி), அரசனின் தரப்பில் தேவேந்திரா (அச்சுத குமார்) நிற்கிறார்கள். இன்னொரு புறம் அரசாங்கத்தில் இருந்து வனத்துறை அதிகாரி முரளி (கிஷோர்), காட்டை ரிசர்வ் ஃபாரஸ்ட்டாக மாற்ற, அந்த நிலத்தில் வாழும் மக்களை அப்புறப்படுத்தும் எண்ணத்துடன் வருகிறார். நிலத்தின் மீது இம்முறை கைகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நீள்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதை.