சினிமா

"நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'' ! அசத்தும் "கனா" ட்ரைலர்

"நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'' ! அசத்தும் "கனா" ட்ரைலர்

webteam

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

தமிழ் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தவிர்க்க முடியாத ஒரு நாயகனாகவும் வளர்ந்துள்ளார். நடிகனாக இருந்த அவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் படத்தில் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார். 

அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா திரைப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் பாடிய ‘யார் இந்த தேவதை’ பாடலை  பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அந்த பாடல் கவர்ந்தது. 

இந்நிலையில் கனா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி கனா ட்ரெய்லர் இன்று வெளியானது. இந்த ட்ரெய்லரை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார். ''விளையாட்டில் பெண்கள் ஆர்வம் கொள்வதற்கு கனா திரைப்படம் மிகப்பெரிய தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன். பெண்களே இது மிகப்பெரிய கனவுக்கான நேரம்'' என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் விளையாட்டு தொடர்பான திரைப்படங்கள் அதிகம் வெளியாகாத நிலையில் கனா திரைப்படம் அந்த வரிசைக்கு தொடக்கமாய் அமையும் என சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ''உன்னால முடியாதுனு யாராவது சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்ன'' என்ற வசனமும், ''இந்த உலகம் ஜெயிச்சிருவேன்னு சொன்னா கேக்காது.ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும். நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'' போன்ற வசனமும் கனா ட்ரெய்லரில் அதிகம் கவனம் கொள்கின்றன. ஒரு மிகப்பெரிய கனவைத்தாங்கும் ஏழை பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.