கேளிக்கை வரி விவகாரத்தில் திரை உலகத்திற்காக குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு கமல்ஹாசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் "குரல் கொடுத்ததற்காக நன்றி ரஜினி அவர்களே. முதலில் ஜென்டில்மேனாக கோரிக்கை வைப்போம். பின்பு பார்த்துக் கொள்ளலாம்" என கூறியுள்ளார்.
திரைத்துறைக்கு ஜிஎஸ்டி-யில் 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தமிழக அரசும் 30 சதவிகித கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனால் திரைத்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் கேளிக்கை வரியை குறைக்க வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இன்று 3-வது நாளாக மூடப்பட்டுள்ளன. மேலும் முதலமைச்சர் பழனிசாமியை சினிமா குழுவினர் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
ஆனால் அரசியல் தொடர்பாக கருத்துகளைப் பேசி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரஜினிகாந்த், திரைத்துறையினரின் பிரச்னைக்கே குரல் கொடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இன்று காலை முதன்முறையாக கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். திரைத்துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் ரஜினிக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.