சினிமா

‘நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’: கமல்ஹாசன்

webteam

தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள நபர்களின் வீடுகளைக் கண்டறிந்து அரசு தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, கொரோனாவிலிருந்து சென்னையைக் காக்க, எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனையடுத்து, இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தரப்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கொரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கமல்ஹாசனிடமே தெரிவிக்காமல் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாக முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், நோட்டீஸ் பற்றிக் கேட்டதற்குச் சரியான முகவரியில்தான் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “கமலின் பழைய முகவரி எனத் தெரியாமல் பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது” என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய வீட்டின் வெளியே கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதை அடுத்து, தான் தனிமைப்படுத்துதலில் இருந்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.

பெரும்பாலோனாருக்கு தெரியும் நான் அந்த வீட்டில் இல்லை என்று. அங்கு என்னுடைய கட்சியின் அலுவலகம் தான் இயங்கி வருகிறது. அதனால், நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருமுன் தடுக்க நானே 2 வாரமாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன். எல்லோரும் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.