சினிமா

பார்வையாளர்களை கவர பிரபல திரையரங்கம் அறிவித்த சலுகை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சங்கீதா

பார்வையாளர்களை கவரும் விதமாக கமலா திரையரங்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் சலுகை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையுலகமும் அதனை நம்பி இருந்த திரையரங்கு அதிபர்களும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தநிலையில், தற்போது ஒரே நாளில் 2, 3 என அதிகளவிலான படங்களை திரையரங்குகளில் வெளியிடும் நிலை மாறி வருகின்றன.

ஏற்கனவே விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, அஜித்தின் ‘வலிமை’, விஜயின் ‘பீஸ்ட்’, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, கமல்ஹாசனின் ‘விக்ரம்’, அருண் விஜயின் ‘யானை’ உள்ளிட்டப் படங்கள் வரிசையாக வெளியாகின. வரும் காலங்களில் கார்த்தியின் ‘விருமன்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, விக்ரமின் ‘கோப்ரா’, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகியப் படங்கள் எல்லாம் வெளிவருகின்றன.

இதனால் திரையரங்குகள் மீண்டும் திருவிழாக்கோலம் கண்டுள்ளன. மேலும் பார்வையாளர்களும் மெல்ல மெல்ல திரையரங்கை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். எனினும், பார்வையாளர்களை கவரும் வகையில், சென்னை கமலா திரையரங்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, புதன்கிழமைதோறும் ஒரு டிக்கெட் விலை 99 ரூபாய் மட்டுமே என்ற சலுகையை அறிவித்துள்ளது. ஆனால் இந்த டிக்கெட் விலை லவுஞ்ச் (ரூ. 152.55) மற்றும் எலைட் (ரூ. 118.18) ஆகிய இரண்டுக்குமே பொருந்துமா என்பது குறித்து தெரியவில்லை.

ஏற்கனவே இதேபோல் சென்னை காசி டாக்கீஸில் ரூ. 120, ரூ. 170, ரூ. 195 மதிப்பிலான டிக்கெட்டுகள் புதன்கிழமைகளில் ரூ. 100-க்கும், ரூ. 64-க்கு விற்கப்படும் டிக்கெட், டிக்கெட்டுகள் மீதம் இருந்தால் திரைப்படம் துவங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்னதாக ரூ. 50-க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கமலா திரையரங்கமும் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது.