கமல்ஹாசன் மற்றும் எஸ்.யு. அருண்குமார் இணையும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும். 'சண்டியர்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் மதுரையில் படமாக்கப்பட உள்ளது. கமலின் டெரர் லுக் மற்றும் 'தோ வாரேன்' எனும் குறிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் செப்டம்பர் 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார். இவர் இயக்கிய 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சித்தா' மற்றும் 'வீர தீர சூரன்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. இந்நிலையில், கமல்ஹாசனுடன் இவர் முதன்முறையாக இணைவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம், இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கூடவே கமல்ஹாசனின் கெட்டப்பும் வெளியிடப்பட்டது. அதில் கமல்ஹாசன் கருப்பு நிறச் சட்டை மற்றும் ஆலிவ் பச்சை நிற பேன்ட் அணிந்து, கையில் அரிவாளுடன் டெரர் லுக்கில் இருந்தார். கூடவே 'தோ வாரேன்' எனவும் அந்த பதிவில் படக்குழு குறிப்பிட்டிருந்தது.
முழுக்க மதுரையில் இந்தப் படம் ஷூட் செய்ய உள்ளனர் எனவும், இப்படத்திற்கு 'சண்டியர்' எனத் தலைப்பு வைக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. கூடவே இதன் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் துவங்குகிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியன் 2, தக் லைஃப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அதன் பிறகு இந்தப் படத்தையும் துவங்காமலே இருக்கிறார் கமல். அன்பறிவ் இயக்கும் படம், அருண்குமார் இயக்கும் படமும் அறிவிப்பு வந்த நிலையிலேயே இருக்கிறது. ஓராண்டாக கமல் படம் எதுவும் வராமல் இருக்கிறது. எனவே இதனை சரி செய்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்க கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி கமல் - எஸ் யு அருண்குமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது படத்தின் அறிமுக வீடியோ வெளியாகலாம் என்றும் தகவல்கள் வந்திருக்கின்றன.
கூடவே இப்படத்தின் பெயர் `சண்டியர்' என வைக்கப்பட உள்ளது எனவும் கடந்த சில வாரங்களாக சொல்லப்படுகிறது. இந்த தலைப்பை தான் முதலில் `விருமாண்டி' படத்திற்கு வைத்து, அது சர்ச்சையானதும் படத்தின் பெயரை மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பிறந்தநாளில் படத்தின் அப்டேட், கூடவே ஷூட்டிங் பற்றிய தகவல் என கமல் டபுள் ட்ரீட் தருவார் என ஆவலாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.