சினிமா

ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை - இயக்குநர் வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் ஆதரவு

Abinaya

ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை என்ற இயக்குநர் வெற்றிமாறனின் கருத்துக்கு ஆதரவாக நடிகர் கருணாஸ், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணி விழாவில், பங்கேற்று பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்” என்று பேசினார்.

இதனை தொடர்ந்து, வெற்றிமாறனுக்கு ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை செளவுந்தராஜன்  உள்ளிட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கருணாஸ் மற்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அதில் “ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம்” எனவும், ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன். நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ, வைணவ இலக்கியங்கள் உண்டு. இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை. பாஜகவிற்கு தமிழக வரலாற்றைப் பற்றி எவ்வித அறிவும், அக்கறையும் இல்லை. மதவெறி மட்டுமே பிரதானம்” எனவும் கருத்து தெரிவித்திருந்தினர்.

இந்நிலையில் தற்போது ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை; சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.