’எனது வீட்டுக்குப் பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள் தான்’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடியில் ஜி ஸ்டூடியோ என்ற படப்பிடிப்புத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்து, நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, ’எனது வீட்டுக்குப் பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம், ஸ்டுடியோக்கள் தான். தென் திரையுலகின் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூடப் பட்டதை கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தேன். திரையுலகிற்கு இதன் உரிமையாளர் கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை ‘தர்மா’ என்று தான் சொல்லுவேன். ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ, அதே போல் இந்த ஸ்டுடியோ மூலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும். வர்த்தகம் என்பதை தாண்டி சினிமா மீது காதல் இருந்தால்தான் இத்தகைய பிரம்மாண்ட ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்’ என்று சொன்னார்.
முன்னதாக இசைஞானி இளையராஜா குத்துவிளக்கு ஏற்றி, சர்வேதச திரையுலகின் கவனத்தை ஈர்க்கும் இது போன்ற ஸ்டுடியோக்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார். ‘ஜி - ஸ்டுடியோஸின் நிர்வாக இயக்குநர் பிரவீன் கூறும்போது, ’இந்த ஸ்டுடியோ துவங்கும் திட்டத்தை எங்களுக்கு அளித்தவர் கமல்ஹாசன்தான். பல ஹாலிவுட் ஸ்டுடியோக்களை நேரில் பார்த்து, அதற்கு இணையாக இதை உருவாக்கி இருக்கிறோம்’ என்றார்.
நடிகர் சங்க பொது செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், நடிகர் சங்க பொதுச் செயலாளர் நாசர், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, பிலிம்சேம்பர் தலைவர் எல்.சுரேஷ், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.