‘இந்தியன்2’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 13 ஆம் தேதி குவாலியரில் தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன்2’. சில தினங்களாக போபால் அருகே குவாலியரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்தது. இங்கு மிக முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்காக பெரிய பொருட்செலவில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் வடிவமைத்த காட்சிகள் எடுக்கப்பட்டன. அத்துடன், இந்த நகரத்தின் பரபரப்பான சாலைக் காட்சிகள் சிலவும் படமாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குவாலியரில் முடிவடைந்த நிலையில், அது தொடர்பான படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்தப் படப்பிடிப்பை முடித்து கொண்டு, கமல்ஹாசன் விமானநிலையத்திற்கு வந்தபோது அவரது ரசிகர்கள் அவரை நெருங்கி புகைப்படம் எடுக்க கேட்டுக் கொண்டனர். ஆகவே அவர் தனது ரசிகர்களுடன் படம் எடுத்து கொண்டார். அந்தப் படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
நாளை கமல்ஹாசனின் பிறந்தநாள். அவர் தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாட இருக்கிறார். அதற்கான நிகழ்ச்சிகளை அவரது கட்சி தொண்டர்களும் சினிமா ரசிகர்களும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து அதற்கான கொண்டாட்டங்களும் நடைபெற உள்ளன. இந்த விழா கொண்டாட்டங்கள் முடிவடைந்த பின் அவர் மீண்டும் குவாலியரில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அடுத்த படப்பிடிப்பு இந்த மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.