சினிமா

ரிலீசுக்கு முன்பே 200 கோடி ரூபாய் வியாபாரம்? - மாஸ் சம்பவத்திற்கு தயாராகும் ‘விக்ரம்’ படம்

சங்கீதா

பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல் ‘விக்ரம்’ படம் வியாபாரம் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, சூர்யா, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், ‘பத்தல பத்தல’ பாடல் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. கமலின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால், எங்கு காணினும் ‘விக்ரம்’ படத்தின் புரமோஷன்களே கண்களில் தென்படுகின்றன. நேற்று முதல் படத்திற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.

இந்நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல் ‘விக்ரம்’ படம் வியாபாரம் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மொழிகளில் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவற்றால் 200 கோடிக்கு ரூபாய்-க்கும் மேல் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் படக்குழு தற்போது மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் 'விக்ரம்' படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி வெளியீட்டு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.