Singeetam Srinivasa Rao Johan Sathyadas / Singeetam Srinivasa Rao
சினிமா

”அவர் கை பற்றி நடந்த சீடர்களுள் நானும் ஒருவன்..” சிங்கீதம் சீனிவாச ராவ் இறப்புக்கு கமல் இரங்கல்!

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இறப்புக்கு நடிகரும் அவருடன் பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியவருமான கமல்ஹாசன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

94 வயதில் காலமான சிங்கீதம் சீனிவாச ராவ், கமல்ஹாசனுடன் இணைந்து பல மறக்கமுடியாத படங்களை உருவாக்கியவர். அவரது இழப்பிறகு இரங்கல் தெரிவித்துள்ள கமல், 'அவர் கை பற்றி நடந்த சீடர்களுள் நானும் ஒருவன்' என உருக்கமான பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பழம்பெரும் புகழ்பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பு காரணமாக அவருடைய 94 வயதில் மருத்துவமனையில் காலமானார்.

தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழில் பல மறக்கமுடியாத படங்களை இயக்கியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள்

கமல்ஹாசனுடன் இணைந்து இவர் உருவாக்கிய ‘ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம்’ என அனைத்துமே பல சாதனைகளை குவித்த திரைப்படங்களாகும். இதில் ’பேசும் படம்’ எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும், இது அப்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் பிலிம்பேர், தமிழ்நாடு அரசு விருதுகளை வென்றதோடு 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

இந்தப்படங்களை தொடர்ந்து இவர்களின் காம்போவில் வெளிவந்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படமும் காலத்தால் அழிக்கமுடியாத படைப்பாகும். இப்படி பல திரைப்படங்களில் புதுமையை புகுத்திய பெருமை இவ்விரு காம்போவிற்கே சேரும்.

இந்தசூழலில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இறப்புக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், “சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன்” என பதிவிட்டுள்ளார்.