‘இந்தியன்2’ படத்தினை தொடர்ந்து ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல்ஹாசன் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இப்போது இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பின் போது நடந்த விபத்து காரணமாக தற்போது அதற்கான வேலைகள் முடங்கி போய் உள்ளன. ஆகவே இந்தப் படம் திட்டமிட்டப்படி உரிய நேரத்தில் வெளியிடப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடைகளில் இருந்து மீண்டு விரைவில் படக்குழு படப்பிடிப்பிற்கான வேலைகள் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகாக இந்தப் படம் வெளியாக உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், ஊழலை மையமாக வைத்து இதன் முதல் பாகம் வெளியானது. அதன் தொடர்சியான இரண்டாம் பாகம் என்பதால் இதில் தற்கால அரசியல் கதைக்களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசன் படம் குறித்து இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆண்டு திரைக்கு வந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் ‘ஜிப்ஸி’ படத்தை பார்த்திருந்தார். மேலும், இப்படம் இனவெறியையும் சாதியவாதத்தையும் தோற்கடிப்பதற்கான ஒரே ஆயுதமாக இன்றைய காலத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும்படி உள்ளது என்று அவர் கூறியதாக செய்தி வெளியானது.
இதனிடையே, ‘ஜிப்ஸி’ படக்குழு சந்திப்பு நடந்த பிற்பாடு கமல்ஹாசனை கவுதம் மேனன் சந்தித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது ‘வேட்டையாடு விளையாடு2’ குறித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றியடைந்த படங்களை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கும் பாணி தலைதூக்கியுள்ளது. ஏற்கெனவே கமல்ஹாசன் நடிப்பில் 1992 ஆண்டு வெளியான வெற்றி படமான ‘தேவர் மகனை’ வைத்து மீண்டும் இரண்டாம் பாகம் எடுக்க கமல் திட்டமிட்டிருந்தார். அதற்கு ‘தலைவன் இருக்கிறான்’ எனத் தலைப்பும் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.