இன்ஸ்டாகிராம் நேரலையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஒருவரை ஒருவர் பாராட்டியது நெகிழ்ச்சி உரையாடலாக அமைந்தது.
கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இன்று இன்ஸ்டாகிராமில் உரையாடிக்கொண்டனர். அப்போது ரஹ்மானுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசிய கமல்ஹாசன், இசையில் பல புதிய முயற்சிகளை வெற்றிகரமாகக் கையாண்ட ரஹ்மான், தனது படைப்பாற்றலை இசையோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒரு எழுத்தாளராகவும் இயக்குநராகவும் உருவெடுக்க வேண்டும் என்றார். அத்துடன் ஒரு இயக்குநருக்கு மிகவும் இலகுவான சூழலை அமைத்துக் கொடுப்பவர் ரஹ்மான் என்றும், அவருடன் பணிபுரிவது மகிழ்வான அனுபவம் என்றும் தெரிவித்தார்.
கமல்ஹாசன் குறித்து ரஹ்மான் கூறுகையில், தான் இன்று வரை ஒரு கமல் ரசிகன் என்றார். கமல்ஹாசனைத் தான் ஒரு மிகப் பெரிய உந்துதலாகப் பார்ப்பதாகவும், ஒரு ரசிகனின் ரசனையைச் செதுக்கி செப்பனிடும் சிற்பி கமல்ஹாசன் எனவும் புகழ்ந்தார். 'மதம் ' என்பதைத் தாண்டி 'இறை' என்பதை உணர்ந்தவர் கமல்ஹாசன் என்றும், குரான் உட்படப் பல மறைகளைப் படித்தறிந்தவர் கமல்ஹாசன் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு படைப்பாளியின் படைப்பு வியாபார ரீதியில் வெல்லாது போனாலும், அந்தப் படைப்பு தரும் பெருமையே சிறந்த அளவுகோல் எனக் கூறிய ரஹ்மான், அது தரும் திருப்தியே மேலானது எனத் தெரிவித்தார். அந்த வகையில் கமல்ஹாசன் வணிக ரீதியாகப் பல வெற்றிகளைப் பார்த்த கலைஞன் மட்டுமல்ல, திரைத்துறையின் பல படிகளைக் கடந்த ஒரு முழுமையான உண்மைக் கலைஞன் என்று ரஹ்மான் கூறினார்.