சினிமா

ஆகஸ்டில் ‘விஸ்வரூபம்2’ ரிலீஸ்?

ஆகஸ்டில் ‘விஸ்வரூபம்2’ ரிலீஸ்?

webteam

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்2’ வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 2014ல் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. இந்தப் படம் தமிழில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்திலுள்ள சில காட்சிகள் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி அக்காட்சிகளை நீக்க வேண்டும் போராட்டம் நடத்தினர். அதனை கண்டு மனவேதனை அடைந்த கமல்ஹாசன் ‘தமிழ்நாட்டை விட்டே வெளியேறுவேன்’ என்று கூறினார். பல கட்ட பேச்சு வார்த்தை, வழக்குகளுக்கு பின் திரைப்படம் வெளியானது. வெற்றியும் அடைந்தது. இப்படத்தினை இயக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்தையும் சேர்த்து இயக்கி இருந்தார் கமல்ஹாசன். மேலும் சில பகுதிகளுக்கு மட்டும் தனியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 

சென்னையிலுள்ள ஆஃபீசர் அகாடெமியில் குதிரை ஏற்றம் செய்வதை போல ஆண்ட்ரியா, கமல்ஹாசன் உட்பட பலர் கலந்து கொண்ட படப்பிடிப்பிற்கான புகைப்படங்களை சில மாதங்கள் முன்பு கமல் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதன் முழுப் படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பதில் குழப்பம் நீடித்தது. இந்தியில் வெளியாக உள்ள ‘விஸ்வரூபம்2’வில் மட்டும் தணிக்கை வாரியம் 17 வெட்டு கொடுத்திருப்பதாக தெரிகிறது. ரஜினிகாந்தின் ‘காலா’விற்கு முன்பாகவே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ‘காலா’ வரும் ஜூன் 7 அன்று வெளியாக உள்ள நிலையில் ‘விஸ்வரூபம்2’ படத்திற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ‘விஸ்வரூபம்2’  வெளியாக உள்ளதாக தற்சமயம் தகவல் கசிந்து வருகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்ல.