காலா படத்தின் கதை தன்னுடையது என கே. ராஜேசேகரன் என்பவர் தொடரப்பட்ட வழக்கில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ரஞ்சித் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் மீண்டும் அவகாசம் அளித்துள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் காலா. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.ஆர். விண்மீன் நிறுவன உரிமையாளர் கே. ராஜேசேகரன் என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். காலா படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கரு அனைத்தும் தன்னுடையது என்றும், அந்த தலைப்பை ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளதாகவும் அதில் கூறியிருந்தார். மேலும் காலா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரியிருந்தார். இதனைத்தொடர்ந்து மனுவை கொண்டு நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் கடந்த மாதம் 15ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் பதிலளிக்க மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று ரஜினி உள்ளிட்டோர் சார்பாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரஜினி தரப்பு பதிலளிக்க 2-வது முறையாக அவகாசம் அளித்துள்ளார்.