பிரசார் பாரதி போர்டில் உறுப்பினராக உள்ள இந்தி நடிகை கஜோலின் பதவியை பறிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி போர்டில் இந்தி நடிகை கஜோல் பகுதி நேர உறுப்பினராக உள்ளார். இதன் விதிமுறைகளின் படி, அதன் கூட்டத்தில், தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பங்கேற்கவில்லை என்றால் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும். கஜோல் தொடர்ந்து 3 முறைக்கு மேல் இக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் பதவியை பறிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுபற்றி கஜோலின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ’ குடும்ப நிகழ்வுகள், மருத்துவ காரணங்கள் மற்றும் முன்பே கொடுக்கப்பட்ட கால்ஷீட் விவகாரங்களால் அவரால் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்தார்.