சினிமா

’பிகில்’ படத்தை ஓரம் கட்டுமா ’கைதி’ ? - திரைவிமர்சனம்.

subramani

போலீஸ் துறைக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையை தீர்க்க ஒரு ஆயுள் தண்டனைக் கைதியை பயன்படுத்துவது தான் படத்தின் ஒன்லைன். ஜேம்ஸ்பாண்ட் காலத்து இந்த ஒன்லைனை கார்த்தி ரசிகர்களுக்கு பிடிக்கும் படி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படத்தில் கார்த்தியின் பெயர் டெல்லி. கைதியை ட்ரீம் வாரியஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

போலீஸ் கைப்பற்றி வைத்திருக்கும் பலகோடி ரூபாய் போதைப்பொருளை மீட்க வில்லன் கும்பல் போராடுகிறது. பிறந்ததிலிருந்து தன் மகளைப் பார்க்காத கார்த்தி போலீஸ் அதிகாரி நரேனுக்கு உதவ நிர்பந்திக்கப்படுகிறார். வில்லன்களோடு போராடி வென்று கார்த்தி தன் மகளை போய் சந்தித்தாரா ? அந்த போராட்டத்தில் கார்த்திக்கு என்ன நடந்தது ? என்பது தான் திரைக்கதை.

எஸ்.ஆர்.பிரபு எப்போதும் வித்யாசமான படங்களை தேர்வு செய்து தயாரிப்பதில் ஆர்வம் உள்ளவர். அந்த வகையில் கைதியும் வழக்கமான மசாலா சினிமா அல்ல. இப்படியான முயற்சிகளுக்கு பிரபுவை மீண்டும் மீண்டும் பாராட்டலாம்.

ஆனால் நூறு ரவுடிகளை ஒற்றை ஆளாக ஹீரோ அடித்து நொறுக்கி பத்து கத்திக் குத்து வாங்கிய பிறகும் உயிர் பிழைத்து தப்பிக்கிறார் என்பதெல்லாம் எந்த நம்பிக்கையில் எழுதப்பட்ட திரைக்கதை என தெரியவில்லை லோகேஷ்.

லாரியில் போதையில் மயங்கிய போலீஸ் அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு புறப்படும் கார்த்தியும் நரேனும் எதிர்கொள்ளும் சவால்கள் சுவாரஸ்யம். பொதுவாக பயணத்தை மைய நூலாக அல்லது ஒரு இணைக்கதையாக வைத்து எடுக்கப்படும் சினிமாக்களுக்கு மினிமம் கியாரண்டி உண்டு. கைதியும் அப்படித்தான்.

தமிழகத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள். அந்த விசயம் துளியும் அரசாங்கத்திற்கோ மீடியாவிற்கோ கசியவில்லை என்பதெல்லாம் அபத்தம். MI3 Machine Gun’ஐ வீடியோ கேம் துப்பாக்கி போல் எடுத்து கார்த்தி பயன்படுத்துகிறார்.

வழக்கமாக கார்த்தி படங்களில் ஒர்க் அவுட் ஆகும் அப்பா மகள் செண்டிமெண்ட் இந்த படத்திலும் உண்டு. பொழுபோக்கு சினிமா வித்யாசமான அல்லது மாற்று சினிமா இப்படி இரு வடிவங்களுக்கும் இடையில் பொருந்துகிற ஜானரில் உருவாகியிருக்கிறது இந்தப்படம்.

ஸ்டண்ட் காட்சிகளை சத்யன் சூரியன் ரசிக்கும்படி படம்பிடித்துள்ளார். இரவு நேர காட்சிகளை அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான் மற்றும் அவருடன் உள்ள கல்லூரி மாணவர்கள் வரும் காட்சிகள் திரைக்கதையை வேகப்படுத்துகிறது. பாடல்கள் இல்லையென்றாலும் பின்னணி இசை கதையை சுமந்து செல்கிறது.

கைதியை தலையில் வைத்து கொண்டாட முடியாது என்றாலும்., நிச்சயம் புறந்தள்ள முடியாது.