சினிமா

பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ் - பிரபல நடிகர் தான் காரணம்?

சங்கீதா

‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பெருமான் ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். அதுவும் அவரின் தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் தாஸ் கதாபாத்திரத்தில் அர்ஜூன்தாஸ் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் வரவேற்பு பெற்றநிலையில், ‘விக்ரம்’ படத்தின் கிளைமேக்சில், ‘கைதி’ அன்புவாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அர்ஜூன் தாஸ் பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

86 புதுமுகங்களைக் கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இளைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ், அவர் சந்திக்கும் பிரச்னைகள், உள்ளூரில் நடக்கும் தொழில் போட்டி, அவரின் நண்பர்கள், அங்கமாலி உணவுகள் ஆகியவற்றை மையப்படுத்தி செம்பன் வினோத் ஜோஸ் கதை எழுதியிருப்பார். லிஜோ ஜோஸ் இயக்கியிருப்பார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் தான், கதாநாயகனாக அர்ஜூன் தாஸ் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக நடிகர் சூர்யா தான், அர்ஜூன் தாஸை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வற்புத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் அர்ஜூன் தாஸ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் முதன்முமதலாக நடிகர் சூர்யா மற்றும் அர்ஜூன் தாஸ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வசந்த பாலனின் ‘அநீதி’, பிரபு சாலமனின் ‘கும்கி 2’, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்களிலும் அர்ஜூன் தாஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.