Kadhal Ooviyam Sunil Kripalani
சினிமா

காதல் ஓவியம் ஹீரோ... மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி! | Sunil Kripalani | Kannan

1982ல் வெளியான படம் `காதல் ஓவியம்'. சுனில் க்ரிப்லானி இப்படத்தின் மூலம் கண்ணன் என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானார்.

Johnson

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகி 1982ல் வெளியான படம் `காதல் ஓவியம்'. சுனில் க்ரிப்லானி இப்படத்தின் மூலம் கண்ணன் என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்த போதிலும், படம் வெளியாகி ஒரு தோல்விப்படமாக அமைந்தது. ஆனால் இப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இப்படத்தின் தோல்வியையும் தாண்டி இதில் நடித்த கண்ணனின் முகத்தையும் ரசிகர்கள் மறந்துவிடவில்லை. `காதல் ஓவியம்' படத்தின் தோல்விக்குப் பிறகும் சில வருடங்கள் இன்னொரு வாய்ப்புக்காக முயற்சித்தாலும், யாரும் வாய்ப்பு தரவில்லை. 

அதற்கு பிறகு நடித்த ஒரு படம் வெளியாகவே இல்லை, இன்னொரு படம் நான்கே நாட்களில் நின்று போனது, பிரபாத் போத்தனுடன் இவர் நடித்த `மீண்டும் ஒரு காதல் கதை' படத்தில் ஒரு சின்ன ரோல் என கிடைத்த வாய்ப்புகளும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதன் பிறகு அமெரிக்கா சென்று படிப்பு வேலை என பிஸியாகிவிட்டார் சுனில். சில வருடங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த சுனில் ஒரு யூட்யூப் சேனலில் பேட்டி அளித்திருந்தார். 

அதனைப் பார்த்த இயக்குநர் அருண் பிரபு, தான் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்கியுள்ள `சக்தித் திருமகன்' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்தப் படம் நாளை (செப்டம்பர் 19) வெளியாகவுள்ளது. `காதல் ஓவியம்' என்ற படத்தின் மூலம் அறியப்பட்டு, பின்பு முற்றிலும் சினிமாவில் இருந்து விலகி இருந்த சுனில், 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்திருக்கிறார்.