சினிமா

“அண்டர் கவர் ஆபரேஷன் சூர்யா” - ‘காப்பான்’ டீசர் ஒரு அலசல்

webteam

தமிழ்ப் புத்தாண்டை முன்வைத்து ‘காப்பான்’ முதல் பார்வை டீசரை நேற்று படக்குழு களம் இறக்கியது. அந்த டீசர் வெளியான சில மணிநேரத்திற்குள்ளாகவே 2 மில்லியன் பார்வையாளர்கள் என்ற எண்ணிக்கையை அடைந்தது. இன்றைய நிலவரப்படி ஏறக்குறைய மூன்று 3 மில்லியனை தொடப்போகிறது டீசர். கே.வி. ஆனந்த் என்றாலே கொஞ்சம் மீடியா சார்ந்த கதை பின்புலத்தை தனது படங்களில் தேடித்தேடி பதிய வைப்பார்.

ஆக, இந்தக் கதையும் மீடியாவை மையமாக கொண்டே உருவாகியுள்ளது என்பதை டீசரை பார்க்கும் போது உறுதியாகிறது. நிறைய அரசியல் அதையொட்டிய தீவிரவாதம் எனத் திரைக்கதையை திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. 

டீசரை ஒட்டுக்க பார்க்கும் போது விவசாயி சூர்யா, முஸ்லிம் கெட் அப் சூர்யா, அதிகாரி லுக் சூர்யா, தீவிரவாதி சூர்யா, நார்த் இண்டியன் லுக் சூர்யா என ஏறக்குறைய 5 விதமான தோற்றங்களில் டீசர் முழுவதையும் ஆகிரமித்துள்ளார் சூர்யா. இந்த டீசரில் விவசாயியாக வரும் சூர்யாவின் தோற்றம் சாயலில் கொஞ்சம் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஆதவன்’ சூர்யாவை ஞாபகப்படுத்துகிறது. 

இந்த விவசாயி சூர்யா, டீசரில் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் விவசாய பிரச்னைகளை குறிவைத்து வசனம் பேசுகிறார். “இயற்கையா உற்பத்தியாகுற நதியை தனக்குதான் சொந்தம்னு உரிமை கொண்டாடுகிற அதிகாரத்தை உங்களுக்கு யாருங்க கொடுத்தது?” என்கிறார். அவரது வசனத்திற்கு நியாயம் சேர்ப்பதை போல டீசரில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலவரம் வெடித்து பலர் ரத்தவெள்ளத்தில் மிதக்கின்றன. ஆக, சூர்யாவின் தோற்றம் ஒரு விவசாய பின்புலத்தை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. 

அவர் அசப்பில் உழவு மாடுகளைப் பிடித்தபடி ஏர்கலப்பையுடன் வரும் காட்சி, ஏறக்குறைய இன்றைய சினிமா உலகிற்கு ஒரு அரிய காட்சி என்றே சொல்லவேண்டும். சமீப காலமாக பெரிய நடிகர்கள் இதை போன்ற கிராமத்து கதையம்சம் உள்ள தோற்றத்தில் தோற்றுவதையே கைக்கழுவி விட்டார்கள். இப்படியான காலத்தில் சூர்யா, விவசாயிகள் சந்திக்கும் அரசியல் சார்ந்த நெருக்கடியை உணர்த்தவே இந்தத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்றும் தோன்றுகிறது.

இந்தப் படத்தின் காஸ்ட் அண்ட் குரூவ் கொஞ்சம் பிரம்மாண்டமாகவே உள்ளது. இந்தப் பிரம்மாண்டத்தை டீசருக்குள் சரியாக கொண்டு வந்துள்ளது படக்குழு. மோகன் லால் பிரதமர் வேடத்தில் நடித்திருக்கலாம் என ஊகிக்க வைக்கிறது டீசர். அவரது மகளாக சாயிஷா இருப்பார் என்றும் தோன்றுகிறது. 

மோகன் லால், “சியாசின், கார்க்கில் அடுத்து சர்ஜிக்கல் அட்டாக் இதைதான் விரும்புகிறதா உங்க பாகிஸ்தான்?” எனக் கோபம் கொப்பளிக்க டீசரில் வசனம் பேசுகிறார். இந்தக் காட்சியில் அவர் பேசும் தமிழின் உச்சரிப்பு கொஞ்சம் வடநாட்டு வாடையில் இருப்பதால், நிச்சயம் இவர் இந்திய பிரதமர் வேடத்தில் இருப்பார் எனச் சொல்லத் தோன்றுகிறது. 

சாயிஷாவின் காதலனாக வருகிறார் ஆர்யா. அவர், “தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிட்டு இந்தியாவை சூப்பர் பவர் ஆக்கப் போகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்புகிறார். ஏதோ, காபரேட் பேரத்தின் போது இந்த வசனம் பேசப்படலாம் எனப் புரிகிறது. அதற்கு அந்த காபரேட் கம்பெனி முதலாளி, “துபாய் கூடதான் பாலைவனம்.. அங்க பணம் கொட்டல” என்கிறார். 

சூர்யாவின் விதவிதமான தோற்றங்களை ஒன்றுக்கு ஒன்று சரியாக அடுக்கி வைத்ததை போல டீசர் சில விஷயங்களுக்கு விடை சொல்லி இருக்கிறது. அதிகாரி தோற்றத்தில் சூர்யா ஏதோ அண்டர் கவர் ஆபரேஷன் செய்யலாம் என நினைக்கும் படி இறுதியாக ஒருவசனம் பேசுகிறார் சூர்யா. அதாவது, “போராடுவது தவறுனா போராட தூண்டுவதும் தவறுதான்” என்கிறார். அதற்கு அவர்மேல் ‘நக்சல்’ பட்டம் கட்டப்படுகிறது. 

இந்த டீசரில் வரும் காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று சேர்த்தை வைத்து கணக்கிட்டால், இந்தப் படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரிலர் என்பதில் சந்தேகம் இல்லை. த்ரிலர் என்றால் ஆக்‌ஷன் இருக்கும். அங்கே ரொமான்ஸ் கொஞ்சமே இருக்கும். ஆகவேதான் டீசரில் சூர்யாவிற்கு ரொமான்ஸ் காட்சிகளே காட்டப்படவில்லை. ஆக, அழுத்தமான ஆக்‌ஷன் ஹீரோவாக சூர்யாவை காட்சிப்படுத்தியுள்ளது ‘காப்பான்’.