‘காலா’ டீஸர் வெளியாகும் நேரம் குறித்த தகவலை தனுஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘கபாலி’ வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மார்ச் ஒன்றாம் தேதி காலை 11 மணிக்கு ‘காலா’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று பிப்ரவரி 27 ஆம் தேதி தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால், ஜெயேந்திர மறைவை முன்னிட்டு ஒரு நாள் தள்ளி மார்ச் 2 ஆம் தேதி டீஸர் வெளியாகும் என்று தனுஷ் கூறினார். இதனால், ரசிகர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு ‘காலா’ டீஸர் வெளியாகும் என்றும் பொறுமையாக காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் தனுஷ் கூறியுள்ளார். கூடவே ஓம் நமச்சிவாய என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.