சினிமா

வெற்றிமாறன் படத்தில் தனுஷுடன் நடிப்பதாக வெளியான தகவல் -ஜூனியர் என்.டி.ஆர். தரப்பு விளக்கம்

சங்கீதா

வெற்றமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் தனுஷ் நடிப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆர். தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், ‘விடுதலை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ‘விடுதலை’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்-உடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து பைலிங்குவல் கதையாக ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், அதில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக ஜூனியர் என்.டி.ஆர்-க்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஜூனியர் என்.டி.ஆர்., தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக பரவிவரும் தகவலில் உண்மை இல்லை என்றும், இது வெறும் வதந்தி என்பதை தெளிவுப்படுத்த விரும்புவதாகவும், இதுபோன்ற ஊகங்களை தவிர்க்கவும் என்றும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருது விழாவை முன்னிட்டு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது படத்தின் புரமோஷனுக்காக அமெரிக்காவில் உள்ளார். மேலும் ஜூனியர் என்.டி.ஆர். அடுத்ததாக கொரட்டல சிவா, பிரசாந்த் நீல், த்ரி விக்ரம் ஆகியோர் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.