சினிமா

மீண்டும் வெற்றிக் கூட்டணி... அமேசானில் வெளியாகும் ஃபஹத்தின் 'ஜோஜி'!

webteam

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான 'ஜோஜி' திரைப்படம், அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் ஃபஹத் 'பாசில் நடிப்பில், ஷியாம் புஷ்கரன் எழுதி திலீஷ் போதன் இயக்கி வெளியான திரைப்படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேநேரம் இந்தக் கூட்டணியும் அதிகமாக பேசப்பட்டது. எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் எழுதிய கதை, திலீஷ் போதன் இயக்கிய விதம், ஃபஹத்தின் நடிப்பு என அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுதான் அதற்கு காரணம். இதன்பின் ஃபஹத்தும், திலீஷ் போதன் மட்டும் மீண்டும் இணைந்தனர்.

அந்தப் படம் 'தொண்டிமுதலும் திரிக்சாக்சியும்'. இந்தப் படத்துக்காக ஃபஹத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சஜீவ் பாழூர் என்பவர் எழுதியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஃபஹத், திலீஷ் போதன், ஷியாம் புஷ்கரன் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு 'ஜோஜி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 7 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முதலில் வெளியாகிறது.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அமேசான் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீசர் காட்சிகள் உடன் இந்த அறிவிப்பு வெளியானது. டீசர் காட்சிகளில் ஃபஹத் பாசில் நீண்ட நிமிடங்கள் மீன்பிடிக்கிறார், அழகிய இடங்களைச் சுற்றி நடந்து மீண்டும் மீன் பிடிக்க வருகிறார். அதோடு முடிகிறது.

"உங்கள் கண்களின் குரல் உங்கள் பேச்சை விட ஆழமானது" என்று டீசருடன் அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் கிரைம் திரில்லர் ட்ராமாவாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேராசை, ஆசை, கொலை மற்றும் ரகசியங்கள் பற்றிய கதை இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தை ஃபஹத், திலீஷ் போதன், ஷியாம் புஷ்கரன் மூவரும் வைத்துள்ள பாவனா ஸ்டூடியோஸ் பெயரிலேயே தயாரித்துள்ளனர். ஏற்கெனவே இந்த பாவனா ஸ்டூடியோஸ் 'கும்பலங்கி நைட்ஸ்' படத்தை உருவாக்கி இருந்தது.

இதற்கிடையே, ஃபஹத் நடிப்பில் ஏற்கெனவே 'இருள்' என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் சொந்த தயாரிப்பில் உருவான 'ஜோஜி' படத்தையும் மீண்டும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வது அம்மாநில தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது.